ஓடும் ரெயில்களில் பயணிகளிடம் தொடர் சங்கிலி பறிப்பில் ஈடுபட்ட 4 பேருக்கு 3 ஆண்டு சிறை- ஈரோடு கோர்ட்டு தீர்ப்பு

ஓடும் ரெயில்களில் பயணிகளிடம் தொடர் சங்கிலி பறிப்பில் ஈடுபட்ட 4 பேருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து ஈரோடு கோர்ட்டு தீர்ப்பளித்தது.

Update: 2022-03-23 22:35 GMT
ஈரோடு
ஓடும் ரெயில்களில் பயணிகளிடம் தொடர் சங்கிலி பறிப்பில் ஈடுபட்ட 4 பேருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து ஈரோடு கோர்ட்டு தீர்ப்பளித்தது. 
4 பேர் கைது
ஈரோடு, சேலம், கோவை மார்க்கமாக செல்லும் ரெயில்களில் ஈரோடு மற்றும் மாவேலிபாளையம் அருகே கடந்த 2019-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் டிசம்பர் மாதம் வரை ஜன்னல் ஓரம் பயணம் செய்யும் பெண்களை குறிவைத்து மர்ம நபர்கள் நகைகளை பறித்து சென்றனர்.
இதுதொடர்பாக ஈரோடு ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து, கொள்ளையர்களை பிடிக்க 5 தனிப்படைகளை அமைத்தனர். இந்த தனிப்படையினர் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டதாக மராட்டிய மாநிலம் சோலாப்பூர் மொகல் பகுதியை சேர்ந்த பாலாஜி சங்கர் சின்டே (வயது 50), தானாஜீ மன்மத் (20), சுனில் மன்மத் (21), பப்பு ஈஸ்வர் பவர் (25) ஆகிய 4 பேரை கைது செய்தனர்.
3 ஆண்டுகள் சிறை
மேலும் பயணிகளிடம் இருந்து திருடிய நகைகளையும் அவர்களிடம் இருந்து போலீசார் மீட்டனர். இதுதொடர்பான வழக்கு ஈரோடு மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் நடந்து வந்தது. இந்த நிலையில், நீதிபதி நாகலட்சுமி என்கிற விஜயலட்சுமி இறுதி விசாரணை நடத்தி நேற்று தீர்ப்பு கூறினார்.
அவர் தனது தீர்ப்பில், ரெயில் பயணிகளிடம் தொடர்ந்து சங்கிலி பறிப்பில் ஈடுபட்ட 4 பேருக்கும் தலா 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தார். தண்டனை பெற்ற 4 பேரையும் கோவை மத்திய சிறையில் அடைப்பதற்காக போலீசார் அழைத்து சென்றனர்.

மேலும் செய்திகள்