நீதிபதிகளுக்கு கொலை மிரட்டல் விவகாரம்: தமிழ்நாட்டில் கைதானவரை காவலில் எடுத்து பெங்களூரு போலீசார் விசாரணை
நீதிபதிகளுக்கு கொலை மிரட்டல் விடுத்த விவகாரத்தில் தமிழ்நாட்டில் கைதானவரை காவலில் எடுத்து பெங்களூரு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்
பெங்களூரு: நீதிபதிகளுக்கு கொலை மிரட்டல் விடுத்த விவகாரத்தில் தமிழ்நாட்டில் கைதானவரை காவலில் எடுத்து பெங்களூரு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
நீதிபதிகளுக்கு மிரட்டல்
கர்நாடகத்தில் ஹிஜாப் விவகாரம் விஸ்வரூபம் எடுத்திருந்தது. இந்த விவகாரம் தொடா்பாக கர்நாடக ஐகோர்ட்டில் வழக்கு நடைபெற்றது. இந்த வழக்கில் ஹிஜாப்புக்கு அரசு பிறப்பித்த தடை செல்லும் என்று ஐகோர்ட்டு தீர்ப்பு அளித்தது. இதையடுத்து, ஹிஜாப் விவகாரத்தில் தீர்ப்பு கூறிய தலைமை நீதிபதி ரிதுராஜ் அவஸ்தி உள்ளிட்ட 3 நீதிபதிகளுக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டது.
கடந்த சில நாட்களுக்கு முன்பு தமிழ்நாடு மதுரையில் நடந்த கூட்டத்தின் போது ரஹமத் உல்லா என்பவர் நீதிபதிகளுக்கு கொலை மிரட்டல் விடுக்கும் விதமாக பேசி இருந்தார். இதையடுத்து, ரஹமத் உல்லாவை மதுரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். அதே நேரத்தில் நீதிபதிகளுக்கு கொலை மிரட்டல் விடுத்த விவகாரத்தில் வக்கீல் சுதா கொடுத்த புகாரின் பேரில் பெங்களூரு விதானசவுதா போலீசிலும் வழக்கு பதிவாகி இருந்தது. அதன்பேரில், போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.
8 நாட்கள் போலீஸ் காவல்
இந்த நிலையில், மதுரையில் கைதான ரஹமத் உல்லாவை பெங்களூரு விதானசவுதா போலீசார் காவலில் எடுத்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்காக திருப்பத்தூர் சிறையில் அடைக்கப்பட்டு இருந்த ரஹமத் உலலாவை கோர்ட்டில் முறைப்படி மனு தாக்கல் செய்திருந்தனர். கோர்ட்டும் விதானசவுதா போலீசாரிடம் ரஹமத் உல்லாவை ஒப்படைக்க அனுமதி வழங்கி இருந்தது. இதையடுத்து, திருப்பத்தூரில் இருந்து அவர் பெங்களூருவுக்கு அழைத்து வரப்பட்டார்.
பின்னர் பெங்களூரு 37-வது கூடுதல் மெட்ரோ பாலிட்டன் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் ஆஜர்படுத்தினார்கள். நீதிபதிகளுக்கு கொலை மிரட்டல் விடுத்தது குறித்து ரஹமத் உலலாவிடம் விசாரிக்க போலீசார் அனுமதி கேட்டனர். இதையடுத்து, அவரை 8 நாட்கள் காவலில் வைத்து விசாரிக்க நீதிபதியும் அனுமதி வழங்கினார். அதைத்தொடர்ந்து, கைதான ரஹமத் உல்லாவிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.