கெபி உண்டியலை உடைத்து திருட முயன்றவர் கைது
கெபி உண்டியலை உடைத்து திருட முயன்றவரை போலீசார் கைது செய்தனர்
பேட்டை:
நெல்லை மகாராஜாநகர் பொன்விழா நகர் பகுதியை சேர்ந்தவர் பீட்டர் ராயன் மகன் லூயிஸ் ராயன். ஆசிரியராக வேலை பார்த்து வருகிறார். இவர் நடத்தி வரும் அறக்கட்டளைக்கு சொந்தமான வேளாங்கண்ணி மாதா கெபி, சுத்தமல்லியை அடுத்த பட்டன்கல்லூரில் உள்ளது. நேற்று முன்தினம் அதிகாலை கெபியின் உண்டியல் உடைக்கப்படும் சத்தம் கேட்டது. அப்போது அங்கு தங்கியிருந்த லூயிஸ்ராயன் சென்று பார்த்த போது, மர்மநபர் தப்பியோடினார். இ்துகுறித்த புகாரின் பேரில் சுத்தமல்லி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மார்க்கரெட் திரேஷா வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார். மேலும் அங்குள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தார்.
அதில், தூத்துக்குடி மாவட்டம் ஆழ்வார்திருநகரியை சேர்ந்த மஜித்அலி மகன் அக்பர் அலி (வயது 26) என்பவர் கெபியின் உண்டியலை உடைத்து திருட முயன்றது தெரியவந்தது. இதையடுத்து அக்பர் அலியை போலீசார் கைது செய்தனர். ஏற்கனவே இவர் நாசரேத் சுற்று வட்டார பகுதியில் 2 திருட்டு வழக்குகளில் தொடர்புடையவர் என்பதும் போலீசார் விசாரணையில் தெரியவந்தது.