ஆந்திராவில் இருந்து தேனிக்கு சேலம் வழியாக கஞ்சா கடத்திய 2 பேர் கைது
ஆந்திராவில் இருந்து தேனிக்கு சேலம் வழியாக 220 கிலோ கஞ்சா கடத்தி சென்ற 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
சேலம்:
ஆந்திராவில் இருந்து தேனிக்கு சேலம் வழியாக 220 கிலோ கஞ்சா கடத்தி சென்ற 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
கஞ்சா கடத்தல்
ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் இருந்து தேனி மாவட்டத்துக்கு சேலம் வழியாக கஞ்சா கடத்தப்படுவதாக சேலம் போதைப்பொருள் நுண்ணறிவு பிரிவு போலீசாருக்கு நேற்று ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில், துணை போலீஸ் சூப்பிரண்டு முரளி, போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவிக்குமார் ஆகியோர் தலைமையில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் சரவணன் மற்றும் போலீசார் சேலம் எருமாபாளையம் பிரிவு ரோட்டில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது அந்த வழியாக வந்த சரக்கு வேனை நிறுத்தி போலீசார் சோதனை நடத்தினர். இதில் சரக்கு வேனில் 7 மூட்டைகளில் கஞ்சா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து மூட்டைகளில் இருந்த 220 கிலோ கஞ்சா மற்றும் சரக்கு வேனை போலீசார் பறிமுதல் செய்தனர். கஞ்சாவின் மதிப்பு ரூ.40 லட்சம் ஆகும்.
2 பேர் கைது
கஞ்சா கடத்திய சரக்கு வேனை ஓட்டி வந்த தேனி மாவட்டம் உத்தமபாளையம் தேவாரம் பகுதியை சேர்ந்த குமார் (வயது 49), கார்த்திக் (34) ஆகிய 2 பேரை போலீசார் கைது செய்தனர். போலீசார் விசாரணையில் அவர்கள் ஆந்திராவில் இருந்து தேனி மாவட்டத்துக்கு கஞ்சா கடத்தி சென்றது தெரியவந்தது.
தொடர்ந்து அவர்களை சிறையில் அடைக்க போலீசார் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். கஞ்சா கடத்தல் தொடர்பாக மேலும் சிலரை போலீசார் தேடி வருகின்றனர்.