சேலம் மத்திய சிறையில் பரபரப்பு: ஜாமீன் எடுக்க பெற்றோர் வராததால் பல்லியை தின்ற கைதி-ஆஸ்பத்திரியில் அனுமதி

ஜாமீன் எடுக்க பெற்றோர் வராததால் பல்லியை தின்ற கைதி ஆஸ்பத்திரியில் சகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இதனால் சேலம் மத்திய சிறையில் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2022-03-23 21:06 GMT
சேலம்:
ஜாமீன் எடுக்க பெற்றோர் வராததால் பல்லியை தின்ற கைதி ஆஸ்பத்திரியில் சகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இதனால் சேலம் மத்திய சிறையில் பரபரப்பு ஏற்பட்டது.
சுவற்றில் பல்லி
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி பகுதியை சேர்ந்தவர் உசேன் முகமது. இவரது மகன் முகமது சதாம் (வயது 21). இவரை வழிப்பறி வழக்கில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் போலீசார் கைது செய்து சேலம் மத்திய சிறையில் அடைத்தனர். கைது செய்யப்பட்ட 3 மாதத்திற்கு மேல் ஆகியும் அவரது பெற்றோர் அவரை சந்திக்க வரவில்லை என்றும், ஜாமீனில் எடுக்கவும் முயற்சி செய்யவில்லை என்றும் அவர் மற்ற கைதிகளிடம் புலம்பிக்கொண்டு இருந்து உள்ளார்.
இதனால் மனவிரக்தியிலும் இருந்ததாக தெரிகிறது. இந்த நிலையில் அவருக்கு ஜெயில் வார்டன்கள் உணவு வழங்கினர். அதை சாப்பிட்டுக்கொண்டிருந்த போது சுவற்றில் ஒரு பல்லி இருப்பதை பார்த்து உள்ளார். திடீரென்று அந்த பல்லியை உயிருடன் பிடித்து சாப்பாட்டோடு சேர்த்து கடித்து தின்று விட்டார்.
மன உளைச்சல்
சிறிது நேரத்தில் வாந்தி எடுத்து உள்ளார். அப்போது பல்லியை தின்று விட்டதாக ஜெயில் வார்டன்களிடம் அவர் தெரிவித்தார். அவர்கள் சிறை போலீசாரிடம் தெரிவித்தனர். அவரை சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு முகமது சதாமுக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர்.
இதுகுறித்து ஜெயில் போலீசார் கூறும் போது சிறையில் அடைக்கப்பட்டதில் இருந்து அவரை குடும்பத்தினர் யாரும் பார்க்க வரவில்லை. இதனால் மன உளைச்சலில் இருந்த அவர் பல்லியை பிடித்து தின்று உள்ளார். சிகிச்சை முடிந்து சிறையில் அடைக்கப்பட்ட பிறகு தான் தற்கொலை செய்து கொள்வதற்காக பல்லியை தின்றாரா? அல்லது வேறு ஏதாவது காரணமா? என்பது குறித்து விசாரணை நடத்தப்படும் என்று கூறினர். இதனால் சேலம் மத்திய சிறையில் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் செய்திகள்