வரதராஜ பெருமாள் கோவில் தேர் வெள்ளோட்டம்
வரதராஜ பெருமாள் கோவில் தேர் வெள்ளோட்டம் நடைபெற்றது
தா.பழூர்
அரியலூர் மாவட்டம், தா.பழூர் அருகே உள்ள தாதம்பேட்டை கிராமத்தில் பிரசித்தி பெற்ற பெருந்தேவி தாயார் சமேத வரதராஜ பெருமாள் கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு புதிதாக தேர் அமைக்க கோவில் நிர்வாகத்தின் சார்பில் முடிவு செய்யப்பட்டது. இதற்காக ரூ.16 லட்சம் மதிப்பீட்டில் நாகப்பட்டினம் ஸ்தபதி பிரத்தியேகமான கலை நுட்பத்துடன் தேர் செய்து முடித்தார். இதனையொட்டி பெருந்தேவி தாயார்-வரதராஜ பெருமாளுக்கு நேற்று முன்தினம் திருக்கல்யாண வைபவம் நடைபெற்றது. அதனைத்தொடர்ந்து நேற்று தேர் வெள்ளோட்டம் நடைபெற்றது. இதனையொட்டி விக்னேஸ்வர பூஜையும், கடம் அமைக்கப்பட்டு சிறப்பு ஹோமம் மற்றும் பூர்ணாஹுதியும் நடைபெற்றன. பின்னர் கடம் புறப்பாடாகி கோவிலிலிருந்து தேருக்கு எடுத்து வரப்பட்டது. பின்னர் பட்டாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க தேரில் கடம் வைக்கப்பட்டது. பின்னர் தேருக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு புனித நீரால் அபிஷேகம் செய்யப்பட்டது. பின்னர் அலங்கரிக்கப்பட்ட தேரை தமிழக பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் குடும்பத்தினர் மற்றும் பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர். அப்போது அங்கு கூடியிருந்த பக்தர்கள் "கோவிந்தா கோவிந்தா" என பக்தி முழக்கமிட்டனர். தேர், ராஜவீதியில் வலம் வந்து நிலையை அடைந்தது. இதில், அரசு அதிகாரிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.