லட்சுமி நரசிம்மர்- சோமேஸ்வரர் கோவில் தேர் நிலையை அடைந்தது
நங்கவள்ளியில் லட்சுமி நரசிம்மர்- சோமேஸ்வரர் கோவில் தேர் நிலையை அடைந்தது. இன்று இரவு சத்தாபரணம் நடக்கிறது.;
மேச்சேரி:-
தேர்த்திருவிழா
நங்கவள்ளியில் பிரசித்தி பெற்ற லட்சுமி நரசிம்ம சாமி- சோமேஸ்வரசாமி கோவில் உள்ளது. இந்த கோவில் சைவ வைணவ ஒற்றுமைக்கு எடுத்துக்காட்டாக விளங்கும் கோவிலாகும். இந்த ஆண்டுக்கான தேர்த்திருவிழா கடந்த 12-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
தினமும் அன்ன வாகனம், சிம்ம வாகனம், சேஷ, அனுமந்த, யானை, கருட, ரிஷப உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் சாமி வீதி உலாவும், திருக்கல்யாண உற்சவமும் நடந்தது.
திரளான பக்தர்கள்
விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் 5 நாட்கள் நடந்தது. 19-ந் தேதி கோவில் முன்பு இருந்து தேரோட்டம் தொடங்கியது. முதலில் விநாயகர் தேரும், 2-வது தேரில் சோமேஸ்வரர்- சவுந்தரவல்லி அம்பாளும், பெரிய தேரில் லட்சுமி நரசிம்மசாமி- ஸ்ரீதேவி பூதேவியுடன் சிறப்பு அலங்காரத்தில் தேரில் எழுந்தருளினர்.
தேர் புறப்பட்டு தாரமங்கலம் பிரிவு சாலை, பஸ் நிலையம், பேரூராட்சி அலுவலகம் வரை வந்தது. நேற்று தோப்பு தெரு பிரிவில் இருந்து கோவில் முன்பு நிலையை வந்து சேர்ந்தது. 5 நாட்கள் நடந்த போராட்டத்தில் திரளான பக்தர்கள் கலந்த கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இன்று (வியாழக்கிழமை) இரவு சத்தாபரணம் நடக்கிறது.