பூட்டியிருந்த வீடுகளில் நகை, பணம் திருட்டு
பூட்டியிருந்த வீடுகளில் நகை, பணம் திருட்டு
மதுரை
மதுரை அண்ணாநகர் தனியார் குடியிருப்பை சேர்ந்தவர் சிவக்குமார் (வயது 47). இவர் அடிக்கடி வீட்டை பூட்டி விட்டு வேலைக்கு சென்று வருவது வழக்கம். சம்பவத்தன்று விசேஷத்திற்கு செல்வதற்காக பீரோவில் வைத்திருந்த பெட்டியை திறந்து நகையை எடுக்க முயன்றார். அப்போது அதில் வைத்திருந்த 3½ பவுன் நகை, 400 கிராம் வெள்ளி பொருட்கள் மற்றும் 1 லட்சம் ரூபாய் ஆகியவை இல்லாமல் இருப்பது கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
அவர் வெளியே சென்ற நேரத்தை அறிந்து யாரோ மர்ம நபர்கள் அந்த பொருட்களை திருடி சென்றிருக்கலாம் என்பது தெரியவந்தது. உடனே சிவக்குமார் இதுகுறித்து போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் அண்ணாநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
மதுரை டி.வி.எஸ்.நகர் மீனாட்சி ரோடு பகுதியை சேர்ந்தவர் சத்யநாராயணன் (30). சம்பவத்தன்று இவர் வீட்டை பூட்டி விட்டு வெளியே சென்று விட்டார். திரும்பி வந்த போது வீட்டின் கதவு உடைக்கப்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனே அவர் உள்ளே சென்று பார்த்த போது பீரோவில் வைத்திருந்த ஒரு பவுன் நகை, 42 கிராம் வெள்ளிப் பொருள்கள் மற்றும் 40 ஆயிரம் ரூபாய் திருடிச் சென்றது தெரியவந்தது..
இதுகுறித்து அவர் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் சுப்பிரமணியபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவங்களில் தொடர்புடைய நபர்களை பிடிக்க போலீசார் அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்தனர். அதில் கிடைத்த தகவலின் அடிப்படையில் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.