நோயாளிகளின் உறவினர்கள் மரத்தடியில் தங்கும் நிலை
தஞ்சையில் உள்ள ராசா மிராசுதார் அரசு ஆஸ்பத்திரிக்கு வரும் நோயாளிகளின் உறவினர்கள் மரத்தடியில் தங்கும் நிலை உள்ளது. போதிய கட்டிட வசதி இல்லாததால் இந்த அவல நிலை உள்ளது.
தஞ்சாவூர்:
தஞ்சையில் உள்ள ராசா மிராசுதார் அரசு ஆஸ்பத்திரிக்கு வரும் நோயாளிகளின் உறவினர்கள் மரத்தடியில் தங்கும் நிலை உள்ளது. போதிய கட்டிட வசதி இல்லாததால் இந்த அவல நிலை உள்ளது.
அரசு ஆஸ்பத்திரி
தஞ்சை பழைய பஸ் நிலையம் அருகே ராசா மிராசுதார் அரசு ஆஸ்பத்திரி உள்ளது. இங்கு மகப்பேறு மற்றும் குழந்தைகள் நல பகுதி, கண் சிகிச்சை பகுதி, சித்த மருத்துவ பிரிவு உள்ளிட்டவை செயல்பட்டு வருகிறது. தமிழகத்தில் அதிக அளவில் பிரசவங்கள் நடைபெறும் ஆஸ்பத்திரிகளில் தஞ்சை ராசா மிராசுதார் அரசு ஆஸ்பத்திரியும் ஒன்று.
இந்த ஆஸ்பத்திரிக்கு தஞ்சை மாவட்டம் மட்டும் அல்லாது அருகில் உள்ள புதுக்கோட்டை, அரியலூர், திருவாரூர் உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்தவர்களும் வருகிறார்கள். இங்கு குழந்தை பெற்ற பெண்கள் சிகிச்சை பெற புதிய கட்டிடங்களும் கட்டப்பட்டு செயல்பட்டு வருகிறது.
நோயாளிகளின் உறவினர்கள்
இந்த ஆஸ்பத்திரியில் ஏராளமான கர்ப்பிணிகள், பிரசவம் ஆன பெண்கள் என ஏராளமானோர் உள்நோயாளிகளாக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள். இது தவிர குழந்தை நோயாளிகளும் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள். உள்நோயாளிகளாக அனுமதிக்கப்பட்டுள்ளவர்களுடன் ஒருவர் மட்டும் தங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
இதனால் அவர்களுடன் வரும் மற்றவர்கள் நோயாளிகளின் உறவினர்கள் தங்க அனுமதிக்கப்பட்டுள்ள கட்டிடத்தில் தங்கி வருகிறார்கள். இதற்காக ஆஸ்பத்திரி வளாகத்தில் பிரசவ வார்டு அருகே ஒரு கட்டிடமும், அதற்கு நேர் எதிரே ஒரு கட்டிடமும் செயல்பட்டு வருகிறது. இந்த 2 கட்டிடங்களிலும் எப்போதும் கூட்டம் நிரம்பியபடி உள்ளது.
மரத்தடியில் தங்கும் நிலை
இதனால் நோயாளிகளின் உறவினர்கள் ஏராளமானோர் அந்த பகுதியில் உள்ள மரத்தடியில் தங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. உள்நோயாளிகளாக அனுமதிக்கப்பட்டுள்ள பெண்கள் தங்குவதால், அவர்களுக்கு தேவையான பொருட்களை வாங்குவதற்காக, வெளியில் ஆண் ஒருவர் காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது. ஆனால் நோயாளிகளின் உறவினர்கள் தங்கும் கட்டிடத்தில் இடம் இல்லாததால் மரத்தடியில் தரைவிரிப்புகளை வாங்கி பிரித்து அதில் படுத்து உறங்குகிறார்கள்.மழை, வெயில் என்றாலும் அவர்களுக்கு மரத்தடி தான் தங்கும் நிலை என்ற நிலையில் அவர்கள் உள்ளனர். இதற்காக வெளியில் ரூ.200 வரையிலான சிறிய தார்ப்பாய்கள் வாங்கி விரித்து அதன் மீது அமர்ந்தவாறு உள்ளனர். இதே நிலை ஆஸ்பத்திரி வளாகத்தில் உள்ள பல்வேறு மரத்தடியிலும் காணப்படுகிறது.
புதிய கட்டிடம்
இது குறித்து சமூக ஆர்வலர்கள் கூறுகையில், “தஞ்சை ராசா மிராசுதார் ஆஸ்பத்திரியில் பிரசவத்திற்ககாக அனுமதிக்கப்பட்டுள்ள பெண்களின் உறவினர்கள் தங்குவதற்கு போதுமான இடம் ஆஸ்பத்திரி வளாகத்தில் இல்லாததால் மரத்தடியில் தங்கும் அவல நிலை காணப்படுகிறது. இதனால் நோயாளிகளின் உறவினர்கள் மிகவும் அவதிக்குள்ளாகிறார்கள். அங்கு ஆஸ்பத்திரி வளாகத்தில் உள்ள கட்டிடமும் சிறிய கட்டிடமாக இருப்பதால் இட வசதி போதுமானதாக இல்லை. மேலும் அங்கு புதிய கட்டிடம் கட்டுவதையும் விரைந்து முடித்து பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும்.”என்றனர்.