விளையாட்டு விடுதிகளில் சேர மாணவர்களுக்கு தேர்வு போட்டிகள்
தஞ்சை மாவட்டத்தை சேர்ந்த மாணவ, மாணவிகள் விளையாட்டு விடுதியில் சேருவதற்கான தேர்வு போட்டிகள் தஞ்சை அன்னை சத்யா விளையாட்டு அரங்கில் நேற்று நடைபெற்றது.இதில் 198 பேர் கலந்து கொண்டனர்.;
தஞ்சாவூர்:
தஞ்சை மாவட்டத்தை சேர்ந்த மாணவ, மாணவிகள் விளையாட்டு விடுதியில் சேருவதற்கான தேர்வு போட்டிகள் தஞ்சை அன்னை சத்யா விளையாட்டு அரங்கில் நேற்று நடைபெற்றது.இதில் 198 பேர் கலந்து கொண்டனர்.
விளையாட்டு விடுதிகள்
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாடு ஆணையத்தின் கீழ் பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவிகள் விளையாட்டுத் துறையில் சாதனைகள் புரிவதற்கு ஏற்ப நல்ல பயிற்சி தங்குமிட வசதி மற்றும் சத்தான உணவுடன் கூடிய விளையாட்டு விடுதிகள் மற்றும் விளையாட்டுப் பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன.
மாணவர்களுக்கான விளையாட்டு விடுதி மதுரை, திருச்சி, திருநெல்வேலி, கிருஷ்ணகிரி, கோயம்புத்தூர், கடலூர், தஞ்சை (வாலிபால், கூடைப்பந்து, பளுதூக்குதல்), அரியலூர், தூத்துக்குடி, சிவகங்கை, தேனி, ராமநாதபுரம், உதகமண்டலம், விழுப்புரம், சென்னை, நெய்வேலி மற்றும் நாமக்கல் ஆகிய இடங்களில் உள்ளன.
தேர்வு போட்டி
மாணவிகளுக்கான விளையாட்டு விடுதி ஈரோடு, திருவண்ணாமலை, நாமக்கல், திண்டுக்கல், நாகர்கோவில், பெரம்பலூர், தேனி, புதுக்கோட்டை, தருமபுரி, மற்றும் சென்னை ஆகிய இடங்களில் செயல்பட்டு வருகின்றன.
இந்த விளையாட்டு விடுதிகளில் உள்ள விளையாட்டுகளில் பயிற்சி பெற்று சிறந்த விளையாட்டு வீரராக விளங்குவதற்கு 7, 8, 9 மற்றும் 11-ம் வகுப்பு சேர்க்கைக்கான மாவட்ட அளவிலான தேர்வு போட்டிகள் அன்னை சத்யா விளையாட்டு அரங்கில் நேற்று நடைபெற்றது.
மாணவ, மாணவிகள்
இதில் மாணவர்களுக்கு தடகளம், இறகுபந்து, கூடைப்பந்து, குத்துச்சண்டை, கிரிக்கெட், கால்பந்து, வாள்சண்டை, ஜிம்னாஸ்டிக்ஸ், கைப்பந்து, ஹாக்கி, நீச்சல், டேக்வோண்டோ, வாலிபால், பளுதூக்குதல், கபாடி, மேசைப்பந்து, டென்னிஸ், ஜூடோ, ஸ்குவாஷ், வில்வித்தை ஆகிய பிரிவுகளில் போட்டிகள் நடைபெற்றது.
மாணவிகளுக்கு தடகளம், இறகுபந்து, கூடைப்பந்து, குத்துச்சண்டை, கால்பந்து, வாள்சண்டை, கைப்பந்து, ஹாக்கி, நீச்சல், டேக்வாண்டோ, வாலிபால், பளுதூக்குதல், கபாடி, டென்னிஸ், ஜூடோ மற்றும் ஸ்குவாஷ் ஆகிய பிரிவுகளில் போட்டிகள் நடைபெற்றன.
198 பேர் பங்கேற்பு
தேர்வு போட்டிகளை மாவட்ட விளையாட்டு அதிகாரி அந்தோணிஅதிஷ்டராஜ் தொடங்கி வைத்தார். தேர்வு போட்டிகள் காலை 8 மணிக்கு தொடங்கி நடைபெற்றன. இதில் தஞ்சை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த 7, 8, 9 மற்றும் 11-ம் வகுப்பு பயில உள்ள மாணவ, மாணவிகள் 198 பேர் கலந்து கொண்டனர். இதில் தேர்வு பெற்றவர்கள் மாநில அளவிலான தேர்வு போட்டிகளில் பங்கேற்பார்கள். அதில் வெற்றி பெறுபவர்கள் கலந்தாய்வு மூலம் விளையாட்டு விடுதிகளில் சேர்க்கப்படுவார்கள்.