சேதமடைந்த மின்கம்பம்
குளச்சல் நகராட்சிக்கு உட்பட்ட 18-வது வார்டு பகுதியில் ஒரு மின் கம்பம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த மின்கம்பத்தில் சிமெண்டு பூச்சுகள் பெயர்ந்து விழுந்து கம்பிகள் வெளியே தெரிந்த வண்ணம் காணப்படுகிறது. எப்போது வேண்டுமானாலும் மின்கம்பம் முறிந்து விழுந்து விபத்து ஏற்படும் வாய்ப்புகள் உள்ளது. எனவே, சேதமடைந்த கம்பத்தை அகற்றி விட்டு புதிய மின்கம்பம் நடுவதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-முகம்மது சபீர், குளச்சல்.
விபத்து அபாயம்
செட்டிகுளத்தில் இருந்து இந்து கல்லூரி செல்லும் சாலையில் ஒரு உணவகம் உள்ளது. இந்த உணவகத்தின் அருகில் கேபிள் ஒயர் மிகவும் தாழ்வாக தொங்கியபடி காணப்படுகிறது. இதனால், அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள், பாதசாரிகள் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து கேபிள் ஒயரை விபத்து ஏற்படாத வண்ணம் மாற்றியமைக்க வேண்டும்.
-டி.எஸ்.சித்தார்த்தன், வடக்கு தாமரைகுளம்.
நடவடிக்கை தேவை
வடசேரி கொல்லவிளை தெருவில் அலங்கார தரைகற்கள் பதிக்கபட்டு இருந்தது. குடிநீர் குழாய் பதிப்பதற்காக அவை அகற்றப்பட்டன. அப்போது, சேதமடைந்த அலங்கார தரைகற்களை அந்த பகுதியில் உள்ள காலி இடத்தில் போட்டுள்ளனர். இதனால், அந்த பகுதி விஷப்பூச்சிகளின் வசிப்பிடமாக மாறி உள்ளதால், அருகில் குடியிருக்கும் பொதுமக்கள் அச்சப்படுகின்றனர். எனவே, அலங்கார தரை கற்களை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-சிவகார்த்திகேயன், வடசேரி.
போக்குவரத்துக்கு இடையூறான கார்
தென்தாமரைகுளத்தில் தேசிய மயமாக்கப்பட்ட வங்கியில் இருந்து காட்டுவிளைக்கு செல்லும் சாலையில் ஒரு திருப்பம் உள்ளது. இந்த திருப்பத்தில் கார் ஒன்று பல மாதங்களாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதால் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்பட்டுள்ளது. இதனால், அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் பெரும் அவதிக்குள்ளாகி வருகிறார்கள். எனவே, போக்குவரத்துக்கு இடையூறாக உள்ள காரை அப்புறப்படுத்த சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-சகாயம், தென் தாமரைகுளம்
சுகாதார சீர்கேடு
சுசீந்திரம் தாணுமாலயசாமி கோவில் அருகில் தெப்பக்குளம் உள்ளது. இந்த தெப்பக்குளத்தை கோவிலுக்கு வரும் பக்தர்கள், பொதுமக்கள் பயன்படுத்தி வருகின்றனர். பொதுமக்கள் சோப்பு, ஷாம்புகள் பயன்படுத்துவதால் தண்ணீரில் ரசாயணம் கலந்து மாசடைந்து சுகாதார சீர்கேடு ஏற்பட்டு பச்சை நிறத்தில் காணப்படுகிறது. இதில், குளிக்கும் மக்களுக்கு உடல் உபாதைகள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளன. எனவே, தண்ணீரை மாற்றுவதுடன், தண்ணீர் மாசடைவதை தடுக்க துணிகள் துவைப்பதை தடை செய்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-எஸ்.முருகன், தெங்கம்புதூர்.