பொன்னமராவதியில் குழந்தைகள் பாதுகாப்பு ஆலோசனை குழு கூட்டம்
குழந்தைகள் பாதுகாப்பு ஆலோசனை குழு கூட்டம் நடைபெற்றது.
பொன்னமராவதி:
பொன்னமராவதியில் 1098 சைல்டு லைன் சார்பில் தாலுகா அளவிலான குழந்தைகள் பாதுகாப்பு ஆலோசனை குழு கூட்டம் நடைபெற்றது. இதற்கு வட்டாட்சியர் ஜெயபாரதி தலைமை தாங்கினார். தேர்தல் துணை வட்டாட்சியர் சேகர், பேரூராட்சி செயல் அலுவலர் மு.செ.கணேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். 1098 சைல்டு லைன் பொன்னமராவதி களப்பணியாளர் பூங்கொடி வரவேற்றார். இதில் குழந்தை திருமணம் தடுத்தல், பாலியல் துன்புறுத்தல், குழந்தை தொழிலாளர் வேலைக்கு அமர்த்துதல் மற்றும் மாவட்ட அளவில் நடைபெற்ற குழந்தை திருமணம் நிறுத்தம் உள்ளிட்டவைகள் பற்றி விளக்கி கூறப்பட்டது. மேலும் கூட்டத்தில் கிராம நிர்வாக அலுவலர்கள் முதல் திருமணச்சான்று வழங்கும் முன் மணமகன், மணமகளின் வயதுச் சான்றிதழை சரிபார்த்து வழங்க வேண்டும். சமீப காலமாக அதிக அளவிலான குழந்தை திருமணங்கள் செய்ய முயற்சிக்கப்படுகிறது. இதுபோன்ற சமயங்களில் கிராம நிர்வாக அலுவலர்கள் தங்களின் உதவியாளர் மூலம் சைல்டு லைன் களப்பணியாளர்களுக்கு தேவையான உதவிகளை செய்து தர வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கை நிறைவேற்றப்பட்டுள்ளது. இதில் தலைமையிடத்து துணைத் தாசில்தார் திலகம், தீயணைப்பு மீட்பு பணிகள் நிலைய அலுவலர் சந்தானம், மாவட்ட குழந்தை தொழிலாளர் நல அலுவலக ஆய்வாளர் பிரபாகரன், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு நல அலுவலகப் பணியாளர் சசிகலா, சுகாதார ஆய்வாளர் தியாகராஜன், வருவாய் ஆய்வாளர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள், பள்ளி ஆசிரியர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.