விற்பனைக்காக வைத்திருந்த கெட்டுப்போன 50 கிலோ மீன்கள் பறிமுதல்

கடலூர் மீன் மார்க்கெட்டுகளில் விற்பனைக்காக வைத்திருந்த கெட்டுப்போன 50 கிலோ மீன்கள் பறிமுதல் செய்யப்பட்டன.;

Update: 2022-03-23 19:10 GMT
கடலூர்முதுநகர், 

கடலூர் முதுநகர், காரைக்காடு மீன் மார்க்கெட் மற்றும் துறைமுகத்தில் உள்ள மீன் மார்க்கெட்டுகளில் கெட்டுப் போன மீன்கள் விற்பனை செய்யப்படுவதாக அதிகாரிகளுக்கு புகார்கள் சென்றன. இதையடுத்து உணவு பாதுகாப்பு துறை மாவட்ட நியமன அலுவலர் டாக்டர் பி.கே.கைலாஷ்குமார், உணவு பாதுகாப்பு அதிகாரிகள் சந்திரசேகரன், நல்லதம்பி, சுப்பிரமணியன் மற்றும் மீன்வளத்துறை உதவி இயக்குனர் தமிழ்மாறன், சார்-ஆய்வாளர் பிரபாகரன், மீன்வள மேற்பார்வையாளர் அறிவுவேந்தன்  ஆகியோர் கடலூர் முதுநகர், காரைக்காடு, துறைமுகம் ஆகிய பகுதிகளில் உள்ள கடைகளில் ஆய்வு மேற்கொண்டனர். இதில் மார்க்கெட்டுகளில் உள்ள சில கடைகளில் விற்பனைக்காக 50 கிலோ கெட்டுப்போன மீன்கள் வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அந்த மீன்களை அதிகாரிகள் பறிமுதல் செய்து அழித்தனர். பின்னர்  மீன் விற்பனையாளர்களிடம் கெட்டுப்போன மற்றும் ரசாயனம் கலந்த மீன்களை கண்டிப்பாக விற்பனை செய்யக்கூடாது. இதை மீறி செயல்பட்டால் சம்பந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்தனர். 

மேலும் செய்திகள்