ரூ.8 கோடி முறைகேடு நடந்துள்ளதாக புகார்

தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் ரூ.8 கோடி முறைகேடு நடந்துள்ளதாக புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Update: 2022-03-23 18:54 GMT
வாணாபுரம்

திருவண்ணாமலை மாவட்டம் தென்கரும்பலூர் கிராமத்தில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் மகளிர் சுய உதவிக்குழு கடன், பயிர்க்கடன், கரும்பு பயிர் கடன், நகைக்கடன் ஆகியவற்றில் ரூ.8 கோடி வரை முறைகேடு நடந்துள்ளதாக கூறப்படுகிறது. 

மேலும் இறந்தவர்கள் மற்றும் கூட்டுறவு சங்கத்தில் உறுப்பினராக இருப்பவர்கள் மீது அவர்களுக்கே தெரியாமல் அவர்களின் பெயரில் நகைக்கடன், பயிர்கடன், விவசாய கடன், மகளிர் சுய உதவிக்குழு கடன் என பல்வேறு வகையில் இந்த கூட்டுறவு சங்கங்களில் பணிபுரியும் அதிகாரிகள் கடன் பெற்றுள்ளதாக போலி ரசீது கொடுக்கப்பட்டு பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டுள்ளதாக கடன் சங்கத்தின் உறுப்பினர்கள் புகார் தெரிவித்தனர். 

இந்த நிலையில் நேற்று திருவண்ணாமலை கூட்டுறவு சார்பதிவாளர் அண்ணாமலை தென்கரும்பலூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்திற்கு நேரில் வந்து விசாரணை மேற்கொண்டார். 

அப்போது பாதிக்கப்பட்டவர்கள் புகார் மனு அளித்தனர். அதிகாரிகள் முறைகேடுகளில் ஈடுபட்டது தெரியவந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

மேலும் செய்திகள்