தொழில் வரியை கட்ட கால அவகாசம் வழங்க வேண்டும்

பண்ருட்டியில் நடந்த கூட்டத்தி்ல் நகராட்சிக்கு செலுத்த வேண்டிய தொழில்வரியை தவணை முறையில் கட்ட கால அவகாசம் வழங்க வேண்டும் என வணிகர்கள் கோரிக்கை விடுத்தனர்.

Update: 2022-03-23 18:34 GMT
பண்ருட்டி, 

பண்ருட்டி நகராட்சிக்கு செலுத்தாமல் நிலுவையில் உள்ள தொழில் வரி, குப்பைவரியை உடனடியாக செலுத்துவது தொடர்பாக ஆலோசனை கூட்டம் பண்ருட்டியில் நடைபெற்றது. கூட்டத்திற்கு தொழில் வர்த்தக சங்க தலைவர் சண்முகம் தலைமை தாங்கினார். பொதுச்செயலாளர் வீரப்பன் முன்னிலை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக நகராட்சி ஆணையாளர் மகேஸ்வரி கலந்து கொண்டார். மேலாளர் ரவி, வருவாய் ஆய்வாளர் மோகன் ஆகியோர் வரிசெலுத்துவதின் அவசியம் குறித்து வலியுறுத்தி பேசினர். கூட்டத்தில் கடந்த 10 ஆண்டுகளாக வசூலிக்காமல் இருந்த தொழில் மற்றும் குப்பை வரியை மொத்ததமாக வணிகர்கள் கட்ட வேண்டும் என்று அதிகாரிகள் வலியுறுத்தினர். இதற்கு வணிகர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்ததோடு, வரியை செலுத்த கால அவகாசம் வழங்க வேண்டும் என்று கூறினர்.
 இதையடுத்து தொழில் வர்த்தக சங்க தலைவர் சண்முகம் கூறுகையில்,  பண்ருட்டி நகராட்சியில் கடந்த 10 ஆண்டுகளாக தொழில் வரி வசூல் செய்யாமல், தற்போது ஒரே நேரத்தில் வரி தொகையை ஒட்டுமொத்தமாக செலுத்துவது என்பது மிகவும் இயலாத காரியம். கடந்த 3 ஆண்டுகளாக கொரோனா பெருந்தொற்று பாதிப்பிலிருந்து மீண்டு வரும் நிலையில், ஒரேநேரத்தில் பெரும்தொகையை வணிகர்களால் செலுத்த முடியாத நிலை உள்ளது. ஆகவே தவணை முறையில் வரியை செலுத்த வணிகர்களுக்கு அரசிடம் இருந்து கால அவகாசம் பெற்று தரவேண்டும்.

குப்பை வரியை குறைக்க வேண்டும்

 மேலும் குப்பை வரி என்பது சொத்துவரியை விட கூடுதலாக உள்ளது. எனவே குப்பை வரியை குறைத்திட உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார். இதுகுறித்து மேல் அதிகாரிகளுக்கு தெரிவித்து நடவடிக்கை எடுப்பதாக ஆணையர் மகேஸ்வரி தெரிவித்தார். இந்த கூட்டத்தில் பண்ருட்டி தொழில் வர்த்தக சங்கம், தங்க நகை வியாபாரிகள் சங்கம், கன்ஸ்யூமர் ஸ்டாக்கிஸ்ட் உரிமையாளர் சங்கம், அரிசி கடை உரிமையாளர்கள் சங்கம், பேருந்து நிலைய கட்டிட வாடகைதாரர்கள் சங்கம், திருமண மண்டபம் உரிமையாளர்கள் சங்கம், அடகு கடை உரிமையாளர்கள், ஸ்வீட் ஸ்டால் உரிமையாளர்கள் சங்கம், புகைப்படக் கலைஞர்கள் சங்கம், எலக்ட்ரிக்கல் அண்ட் ஹார்டுவேர்ஸ் சங்கம், செல்போன் விற்பனையாளர்கள் சங்கம், எலக்ட்ரிக்கல்- எலக்ட்ரானிக்ஸ் விற்பனையாளர்கள் சங்கம் உள்பட பல்வேறு சங்க நிர்வாகிகள், வணிகர்கள் கலந்து கொண்டனர். முடிவில் பொருளாளர் கருணாநிதி நன்றி கூறினார்.

மேலும் செய்திகள்