போக்குவரத்து நெரிசலில் சிக்கி தவிக்கும் வாகனங்கள்
லெட்சுமாங்குடியில் போக்குவரத்து நெரிசலில் வாகனங்கள் சிக்கி தவிக்கின்றன. எனவே ஒரு வழிப்பாதை அமைக்க வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்து வருகிறார்கள்.
கூத்தாநல்லூர்:
லெட்சுமாங்குடியில் போக்குவரத்து நெரிசலில் வாகனங்கள் சிக்கி தவிக்கின்றன. எனவே ஒரு வழிப்பாதை அமைக்க வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்து வருகிறார்கள்.
லெட்சுமாங்குடி சாலை
கூத்தாநல்லூரில் உள்ள லெட்சுமாங்குடி நான்கு வழி சாலையில், திருவாரூர்- மன்னார்குடி வழித்தடத்தில் அமையப்பெற்ற லெட்சுமாங்குடி கடைவீதி சாலை பல ஆண்டுகளாக மிகவும் குறுகலான சாலையாகவே இருந்து வருகிறது. இந்த சாலையின் அருகில் அரசு ஆஸ்பத்திரி, தாசில்தார் அலுவலகம், நகராட்சி அலுவலகம், தீயணைப்பு நிலைய அலுவலகம் ஆகிய முக்கிய அலுவலகங்கள் உள்ளன.
எனவே மேற்கண்ட இடங்களுக்கு அந்த பகுதி மக்கள் லெட்சுமாங்குடி கடைவீதி சாலையில் தான் சென்று வர வேண்டும்.
மேலும் அந்தபகுதி மக்கள் அத்தியாவசிய பொருட்கள் வாங்குவதற்கு லெட்சுமாங்குடி கடைவீதியில் அதிகளவில் வந்து செல்கின்றனர். இந்த நிலையில் கூட்ட நெரிசல் மிகுந்த லெட்சுமாங்குடி கடைவீதி சாலையை கடந்து தான் திருவாரூர், மன்னார்குடி, நாகை, தஞ்சை ஆகிய ஊர்களுக்கு செல்லக்கூடிய அரசு மற்றும் தனியார் பஸ்கள், பள்ளி கல்லூரி வாகனங்கள் மற்றும் கனரக வாகனங்கள் உள்பட அனைத்து வாகனங்களும் சென்று வர வேண்டும்.
போக்குவரத்து நெரிசல்
லெட்சுமாங்குடி கடைவீதி சாலை குறுகலான சாலையாக இருப்பதால் எதிர் எதிரே வரும் வாகனங்கள் கடந்து செல்ல முடியாமல் பல மணி நேரம் போக்குவரத்து நெரிசலில் சிக்கி தவிக்கும் அவலநிலை பல ஆண்டுகளாக இருந்து வருகிறது.
இதனால் வாகனங்கள் கடந்து செல்ல முடியாமல் ஸ்தம்பித்து நின்று விடுகிறது. இதனால் அவசரமாக நோயாளிகளை ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லும் ஆம்புலன்ஸ் மற்றும் பள்ளி வாகனங்கள் உள்பட அவசர தேவைக்கு செல்லும் அனைத்து வாகனங்களும் சிக்கி கொள்வதால் பொது மக்கள் பல்வேறு சிரமங்களை அடைந்து வருகின்றனர்.
ஒரு வழி பாதை அமைக்க கோரிக்கை
பல ஆண்டுகளாக இத்தகைய அவலநிலை இருந்து வருகிறது.
எனவே இத்தகைய போக்குவரத்து நெரிசலை தவிர்க்க லெட்சுமாங்குடி சாலையில் ஒரு வழி பாதை அமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்தபகுதி மக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்து வருகிறார்கள்.