பால்பண்ணையில் பணம் மோசடி செய்த மேலாளர் கைது
பால்பண்ணையில் பணம் மோசடி செய்த மேலாளர் கைது செய்யப்பட்டார்.
கரூர்,
வெள்ளியணை அருகே உள்ள வையாபுரி கவுண்டனூர் பகுதியை சேர்ந்தவர் சுந்தரராஜ் (வயது 53). இவர் அப்பகுதியில் பால் பண்ணை நடத்தி வருகிறார் இந்நிலையில் அவர் கரூர் மாவட்ட பொருளாதார குற்றப்பிரிவு போலீசில் புகார் மனு கொடுத்தார். அந்த மனுவில், தனது பால் பண்ணையில் மேலாளராக பணிபுரிந்து வரும் செல்லாண்டிபட்டியை சேர்ந்த சதீஷ்குமார், மேற்பார்வையாளர் கோபால், கம்ப்யூட்டர் ஆபரேட்டர் சந்திரலேகா, பாலை தரம் பிரிக்கும் சுரேஷ், அளவீடு செய்யும் மருதமுத்து, கொள்முதல் செய்யும் கந்தசாமி ஆகிய 6 பேரும் சேர்ந்து கடந்த 4 வருடங்களாக பாலின் தரம், அளவு ஆகியவற்றை உற்பத்தியாளர் கணக்கில் கூடுதலாக காண்பித்துள்ளனர்.
பின்னர் அவற்றை மேலாளரின் வங்கிக் கணக்கில் வரவு வைத்து உண்மையான தொகையை உற்பத்தியாளர்களுக்கு கொடுத்து விட்டு மீதமுள்ள தொகையை இவர்கள் அனைவரும் பிரித்து கொண்டுள்ளனர். இதன்மூலம் ரூ.79 லட்சத்து 92 ஆயிரத்து 359 மோசடி நடைபெற்று உள்ளது. இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது. இந்த புகாரின்பேரில், கரூர் மாவட்ட பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிந்து பால்பண்ணை மேலாளர் சதீஷ் குமாரை கைது செய்தனர். மேலும், தலைமறைவாகியுள்ள கோபால், சந்திரலேகா, சுரேஷ், மருதமுத்து, கந்தசாமி ஆகிய 5 பேரையும் போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.