சிறை கைதியின் உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டம்
மின்சாரம் தாக்கி இறந்த சிறை கைதியின் சாவில் மர்மம் இருப்பதாக கூறி அவரது உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சிவகங்கை,
மின்சாரம் தாக்கி இறந்த சிறை கைதியின் சாவில் மர்மம் இருப்பதாக கூறி அவரது உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திறந்தவெளி சிறை
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியை சேர்ந்தவர் கருப்பசாமி (வயது52). கூலித் தொழிலாளியான இவர் ஒரு கொலை வழக்கில் கைதாகி ஆயுள் தண்டனை பெற்று சிவகங்கை மாவட்டம் காளையார் கோவிலை அடுத்த புரசடி உடைப்பு என்ற இடத்தில் உள்ள திறந்தவெளி சிறையில் அடைக்கப்பட்டு இருந்தார்.
இந்தநிலையில் கருப்பசாமி நேற்றுமுன்தினம் மின்சாரம் தாக்கியதில் இறந்துபோனார். அவரது உடல் சிவகங்கை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பிரேத பரிசோத னைக்காக வைக்கப்பட்டு உள்ளது. இந்தநிலையில் இறந்துபோன கருப்பசாமியின் மனைவி இளங்கேஸ்வரி (வயது49) நேற்று தன்னுடைய மகன், மகள் மற்றும் உறவினர்களுடன் சிவகங்கை மருத்துவக்கல்லூரி மருத்துவ மனைக்கு வந்தார்.
அவர் தன்னுடைய கணவரின் சாவில் மர்மம் உள்ளதாகவும் அவர் கொலை செய்யப்பட்டு உள்ளதாகவும், சிறைத்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி உடலை வாங்க மறுத்தார். பின்னர் அவர்கள் மாவட்ட கலெக்டர் மதுசூதன் ரெட்டி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செந்தில்குமார் ஆகியோரை சந்தித்து கோரிக்கை மனு ஒன்றை கொடுத்தார்.
தண்டனை காலம்
அதில் கூறியுள்ளதாவது:- கருப்பசாமி ஒரு கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்று கடந்த 2006-ம் ஆண்டு முதல் சிறையில் இருந்து வருகிறார். அவர் 2018-ம் ஆண்டு வரை மதுரை மத்திய சிறையில் இருந்தார். பின்னர் புரசடி உடைப்பு பகுதியி உள்ள திறந்தவெளி சிறைக்கு மாற்றப்பட்டார். அவர் சிறையில் இருக்கும்போது வருடத்திற்கு 2 முறை பரோலில் வருவார். நாங்களும் அடிக்கடி அங்கு சென்று அவரை பார்த்து வருவோம். கடந்த 10-ந் தேதி நான் சிறையில் சென்று அவரை பார்த்தேன். அப்போது அவர் விரைவில் வந்துவிடுவதாக கூறினார்.
அத்துடன் சிறையில் அவருக்கு கொடுக்கப்பட்ட சம்பளம் ரூ. 5 ஆயிரத்தை என்னிடம் கொடுத்தார். மேலும் கடந்த 17-ந் தேதி என்னிடம் போனில் பேசினார். அப்போது அவர் தண்டனை காலம் முடிந்த பின்னரும் என்னை வெளியில் விடுவதாக தெரியவில்லை. எனவே விருதுநகர் மாவட்ட கலெக்டரிடம் சென்று புகார் கொடு என்று தெரிவித்தார். இந்த நிலையில் 22-ந் தேதி என் கணவர் மின்சாரம் தாக்கி இறந்து விட்டதாக கூறுகிறார்கள்.
மர்மம்
என் கணவர் இறப்பில் மர்மம் இருப்பதாக தெரிகிறது. அத்துடன் சிறை அதிகாரிகள் மீது சந்தேகம் உள்ளது. எனவே என் கணவர் இறப்பை கொலை வழக்காக மாற்றி சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. கருப்பசாமி மரணம் தொடர்பாக சிவகங்கை மாவட்ட உரிமையியல் நீதிபதி இனியா கருணாகரன் சிவகங்கை மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு சென்று விசாரணை நடத்தினார்.