பாலியல் வன்கொடுமையை தடுக்க அரசு அலுவலர்கள் ஒருங்கிணைந்து பணியாற்ற வேண்டும் தமிழ்நாடு மகளிர் ஆணைய தலைவர் குமாரி பேச்சு
பாலியல் வன்கொடுமையை தடுக்க அரசு அலுவலர்கள் ஒருங்கிணைந்து பணியாற்ற வேண்டும் என்று தர்மபுரியில் நடந்த ஆய்வுக்கூட்டத்தில் தமிழ்நாடு மகளிர் ஆணைய தலைவர் குமாரி பேசினார்.
தர்மபுரி:
பாலியல் வன்கொடுமையை தடுக்க அரசு அலுவலர்கள் ஒருங்கிணைந்து பணியாற்ற வேண்டும் என்று தர்மபுரியில் நடந்த ஆய்வுக்கூட்டத்தில் தமிழ்நாடு மகளிர் ஆணைய தலைவர் குமாரி பேசினார்.
ஆய்வுக்கூட்டம்
மகளிர் உரிமைகள் பாதுகாப்பு மற்றும் வாழ்வாதார மேம்பாடு குறித்து பல்வேறு துறை அதிகாரிகள் பங்கேற்ற ஆய்வுக்கூட்டம் தர்மபுரி கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு கலெக்டர் திவ்யதர்சினி முன்னிலை வகித்தார். தமிழ்நாடு மாநில மகளிர் ஆணைய தலைவர் குமாரி கலந்துகொண்டு மகளிர் உரிமைகள் பாதுகாப்பு மற்றும் வாழ்வாதார மேம்பாடு குறித்து ஆய்வு நடத்தினார்.
அப்போது அவர் பேசியதாவது:-
பெண்களின் உரிமைகளை பாதுகாத்தல், பெண்களின் வாழ்வாதார முன்னேற்றத்திற்கான திட்டங்களை முன்னெடுத்தல், பெண் கல்வி, பாதுகாப்பு உள்ளிட்டவற்றை பெண்களுக்கு முழுமையாக உருவாக்குவதற்கான பல்வேறு நடவடிக்கைகளை எடுத்தல் ஆகியவை மகளிர் ஆணையத்தின் முக்கிய நோக்கமாகும். குழந்தை திருமண தடுப்பு, பெண் பாலியல் வன்கொடுமை தடுப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை மகளிர் ஆணையம் மேற்கொண்டு வருகிறது.
ஒருங்கிணைந்து பணியாற்ற வேண்டும்
தமிழகத்தில் உள்ள அனைத்து மாநகராட்சிகளிலும் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள பெண் பிரதிநிதிகள், பெண் மாமன்ற உறுப்பினர்களை கொண்ட குழு அமைத்து பெண்களுக்கான விழிப்புணர்வை முழுமையாக மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக விரைவில் பயிற்சி அளிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. பெண்கள் தங்களுக்கு பிரச்சினை என்று வரும்போது அவர்களிடம் கனிவாக பேசி, கோரிக்கைகளை கேட்டறிந்து அவற்றின் மீது நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். பெண்களை காக்கவும், பெண் கல்வியை ஊக்குவிக்கவும், குழந்தை திருமணம், பாலியல் வன்கொடுமை போன்றவற்றை தடுக்கவும், அரசு அலுவலர்கள் ஒருங்கிணைந்து பணியாற்ற வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
கூட்டத்தில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கலைச்செல்வன், உதவி கலெக்டர் சித்ரா விஜயன், மாநில மகளிர் ஆணைய உறுப்பினர் மாலதி, அரூர் உதவி கலெக்டர் முத்தையன், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத்தடுப்பு பிரிவின் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு குணசேகரன், துணை போலீஸ் சூப்பிரண்டு வினோத், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் ஜான்சிராணி, மாவட்ட சமூக நல அலுவலர் பவித்ரா, நலப்பணிகள் இணை இயக்குனர் மலர்விழி வள்ளல், சுகாதாரப்பணிகள் துணை இயக்குனர் சவுண்டம்மாள் உள்பட துறை சார்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டனர்.