திருமணமான 8 மாதத்தில் விஷம் குடித்து புதுப்பெண் தற்கொலை உதவி கலெக்டர் விசாரணை
திருமணமான 8 மாதத்தில் விஷம் குடித்து புதுப்பெண் தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து உதவி கலெக்டர் விசாரணை நடத்தி வருகிறார்.
பென்னாகரம்:
தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் அருகே உள்ள பூஞ்சோலை கிராமத்தை சேர்ந்தவர் பச்சையப்பன். பொக்லைன் ஆபரேட்டர். இவரது மனைவி லட்சுமி (வயது 19).. இவர்களுக்கு கடந்த 8 மாதத்திற்கு முன்பு திருமணம் நடைபெற்றது. பச்சையப்பன் கோவையில் வேலை செய்து வந்தார். இவர் மாதத்திற்கு ஒரு முறை மட்டுமே வீட்டிற்கு வந்து சென்றுள்ளார். கணவர் தனியாக விட்டு சென்றதால் மனமுடைந்த லட்சுமி விஷம் குடித்து விட்டு வீட்டில் மயங்கி கிடந்தார். இதைப்பார்த்த லட்சுமியின் பாட்டி ஜானகி மற்றும் அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு பென்னாகரம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரியில் அவர் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று புதுப்பெண் லட்சுமி பரிதாபமாக இறந்தார். இதுதொடர்பாக பென்னாகரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் திருமணமான 8 மாதத்திற்குள் புதுப்பெண் இறந்தது தொடர்பாக தர்மபுரி உதவி கலெக்டர் சித்ராவிஜயன் விசாரணை நடத்தி வருகிறார்.