வீட்டின் பூட்டை உடைத்து நகை திருடிய தொழிலாளி கைது

நெகமம் அருகே வீட்டின் பூட்டை உடைத்து நகை திருடிய தொழிலாளி கைது செய்யப்பட்டார். வாடகைக்கு குடிவந்த 10 நாட்களில் வீட்டின் உரிமையாளரிடமே அவர் கைவரிசை காட்டியுள்ளார்.

Update: 2022-03-23 17:53 GMT
நெகமம்

நெகமம் அருகே வீட்டின் பூட்டை உடைத்து நகை திருடிய தொழிலாளி கைது செய்யப்பட்டார். வாடகைக்கு குடிவந்த 10 நாட்களில் வீட்டின் உரிமையாளரிடமே அவர் கைவரிசை காட்டியுள்ளார்.

இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-

நகை திருட்டு

நெகமம் அருகே உள்ள வடசித்தூரை சேர்ந்தவர் பொன்ராஜ் (வயது 49). இவருடைய வீட்டின் மேல் பகுதியை வாடகைக்கு விடுவதாக அறிவிப்பு வைத்திருந்தார். இதனைக்கண்ட  ராமநாதபுரம் மாவட்டம் கருங்காலக்குடியை சேர்ந்த கட்டிட தொழிலாளி பாலமுருகன் (32) என்பவர் கடந்த 10 நாட்களுக்கு முன்பு வாடகைக்கு குடிவந்தார்.

இந்த நிலையில் சம்பவத்தன்று பொன்ராஜ் தனது குடும்பத்தினருடன் வெளியே சென்றார். பின்னர் திரும்பி வந்து பார்த்தபோது, வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு, கதவு திறந்து கிடந்தது. 

இதனால் அதிர்ச்சியடைந்த பொன்ரான் வீட்டின் உள்ளே சென்று பார்த்தார். அப்போது, பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த 4 பவுன் திருட்டு போயிருந்தது. மேலும் வீட்டின் மேல் பகுதியில் வாடகைக்கு இருந்த பாலமுருகனையும் காணவில்லை.

கட்டிட தொழிலாளி கைது

இதுகுறித்து பொன்ராஜ் நெகமம் போலீசில் புகார் அளித்தார். இந்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இந்த நிலையில் போலீசார் நேற்று முன்தினம் இரவு அந்த பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

அப்போது, அந்த வழியாக சந்தேகத்திற்கு இடமாக வந்தவரை பிடித்து விசாரணை நடத்தினர். இதில் அவர் ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த பாலமுருகன் என்பதும், பொன்ராஜ் வீட்டில் நகை திருடியதும் தெரியவந்தது.

 இதையடுத்து அவரை போலீசார் கைது செய்து, அவரிடம் இருந்த 4 பவுன் தங்க நகையை பறிமுதல் செய்தனர். பின்னர் அவரை பொள்ளாச்சி கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

வாடகைக்கு குடிவந்த 10 நாட்களில் உரிமையாரின் வீட்டின் பூட்டை தொழிலாளி உடைத்து நகை திருடிய சம்பவம் அந்த பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

மேலும் செய்திகள்