கேரளாவுக்கு கடத்த முயன்ற 3½ டன் ரேஷன் அரிசி பறிமுதல்
ஆனைமலை அருகே கேரளாவுக்கு கடத்த முயன்ற 3½ டன் ரேஷன் அரிசியை உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.;
பொள்ளாச்சி
ஆனைமலை அருகே கேரளாவுக்கு கடத்த முயன்ற 3½ டன் ரேஷன் அரிசியை உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ரேஷன் அரிசி
பொள்ளாச்சி, ஆனைமலை பகுதிகளில் உள்ள ரேஷன் கடைகளில் விலையில்லாமல் வழங்கப்படும் ரேஷன் அரிசியை பொதுமக்களிடம் இருந்து குறைந்த விலைக்கு வாங்கி, கடத்தல்காரர்கள் கேரளாவில் அதிக விலைக்கு விற்பனை செய்து வருகின்றனர்.
இந்த நிலையில் ஆனைமலை பகுதியில் இருந்து ரேஷன் அரிசி கடத்துவதாக உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் கோபிநாத்துக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இந்த தகவலின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் தியாகராஜன் மற்றும் போலீசார் ஆனைமலை, கோட்டூர், ஒடைகுளம், செமனாம்பதி உள்பட சுற்று வட்டார பகுதிகளில் சோதனை மேற்கொண்டனர். அப்போது ஒடையகுளத்தில் வாய்க்கால் பகுதியில் மறைவான இடத்தில் ரேஷன் அரிசி மூட்டைகள் அடுக்கி வைக்கப்பட்டு இருந்தது தெரியவந்தது.
போலீசார் விசாரணை
சுமார் 70 சாக்கு மூட்டைகளில் 3500 கிலோ ரேஷன் அரிசி பதுக்கி வைக்கப்பட்டு இருந்தது. இதற்கிடையில் போலீசார் வருவதை பார்த்ததும் கடத்தல்காரர்கள் தப்பி ஓடி விட்டனர்.
இதையடுத்து போலீசார் அரிசி மூட்டைகளை பறிமுதல் செய்து நல்லூரில் உள்ள உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸ் நிலையத்திற்கு கொண்டு வந்தனர். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தினார்கள்.
விசாரணையில் அந்த பகுதிகளில் உள்ள பொதுமக்களிடம் இருந்து ரேஷன் அரிசியை வாங்கி, கேரளாவுக்கு கடத்துவதற்கு பதுக்கி வைக்கப்பட்டு இருந்தது தெரியவந்தது. மேலும் இதுகுறித்த புகாரின் பேரில் போலீசார் ராஜபாண்டி என்பவர் மீது வழக்குப்பதிவு செய்து, அவரை வலைவீசி தேடி வருகின்றனர்.