மாகாளியம்மன் கோவிலில் பக்தர்கள் குண்டம் இறங்கி வழிபாடு

ஜமீன்ஊத்துக்குளி மாகாளியம்மன் கோவில் திருவிழாவையொட்டி பக்தர்கள் குண்டம் இறங்கி வழிபட்டனர்.

Update: 2022-03-23 17:52 GMT
பொள்ளாச்சி

ஜமீன்ஊத்துக்குளி மாகாளியம்மன் கோவில் திருவிழாவையொட்டி பக்தர்கள் குண்டம் இறங்கி வழிபட்டனர்.

மாகாளியம்மன் கோவில்

பொள்ளாச்சி அருகே உள்ள ஜமீன்ஊத்துக்குளி மாகாளியம்மன் கோவிலில் ஆண்டுதோறும் குண்டம் திருவிழா வெகுவிமரிசையாக கொண்டாடப்படும். இந்த ஆண்டிற்கான திருவிழா கடந்த 8-ந்தேதி சக்தி கும்பஸ்தானத்துடன் தொடங்கியது. இதை தொடர்ந்து கடந்த 10-ந்தேதி கோவிலில் பூவோடு வைத்தல் நிகழ்ச்சி நடைபெற்றது.

 வருகிற 16-ந்தேதி முதல் 21-ந்தேதி வரை கொடிமுடி, பழனி, நல்லூத்து, கூடுதுறை, தெய்வகுளம் தீர்த்தம் கொண்டு வரப்பட்டது. மேலும் தினமும் மாலையில் புனித தீர்த்தங்கள் கொண்டு வரப்பட்டு அம்மனுக்கு அபிஷேக ஆராதனை நடைபெறுகிறது.

 நேற்று முன்தினம் காலை 7 மணிக்கு குண்டம் திறக்கப்பட்டு பூஜைகள் நடைபெற்றது. பின்னர் மாலை 4 மணிக்கு விநாயகர் கோவிலில் இருந்து பூவோடு புறப்படுதல், இரவு 8 மணிக்கு அகத்தூர் அம்மன் தீர்த்தம் கொண்டு வருதல், இரவு 9 மணிக்கு அக்னி குண்டம் வளர்த்தல் நிகழ்ச்சிகள் நடந்தது.

குண்டம் இறங்கி வழிபாடு

முக்கிய விழாவான பக்தர்கள் குண்டம் இறங்குதல் நேற்று நடைபெற்றது. இதையொட்டி மாகாளியம்மன், குண்டத்து காளியம்மன் சிறப்பு அலங்காரத்தில் வீற்றிருந்தனர். இதையொட்டி 60 அடி நீளத்திற்கு குண்டம் அமைக்கப்பட்டு இருந்தது. விரதம் இருந்த பக்தர்கள் கோவிந்தா... கோவிந்தா... என்று பக்தி கோஷம் எழுப்பியப்படி குண்டம் இறங்கினர். 

விழாவை காண ஏராளமான பக்தர்கள் வந்திருந்தனர். இதையொட்டி பொள்ளாச்சி நகர மேற்கு போலீசார் மற்றும் ஊர்க்காவல் படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இதை தொடர்ந்து அம்மனுக்கு பொங்கல் வைத்தல் மற்றும் பக்தர்கள் கோவிலுக்கு மாவிளக்கு எடுத்து வரும் நிகழ்ச்சி நடைபெற்றது. 

நாளை (வெள்ளிக்கிழமை) அம்மன் ஊர்வலம், மஞ்சள் நீராடுதல், மகா அபிஷேகம், ஆராதனை பூஜைகள் நடைபெறுகிறது.

மேலும் செய்திகள்