தேசிய வாக்காளர் விழிப்புணர்வு போட்டிக்கு விண்ணப்பிக்க காலஅவகாசம் நீட்டிப்பு கலெக்டர் ஜெயசந்திரபானு ரெட்டி தகவல்
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தேசிய வாக்காளர் விழிப்புணர்வு போட்டிக்கு விண்ணப்பிக்க வருகிற 31-ந் தேதி வரை காலஅவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
கிருஷ்ணகிரி:
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தேசிய வாக்காளர் விழிப்புணர்வு போட்டிக்கு விண்ணப்பிக்க வருகிற 31-ந் தேதி வரை காலஅவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மாவட்ட கலெக்டர் ஜெயசந்திரபானு ரெட்டி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
போட்டிகள்
இந்திய தேர்தல் ஆணையம் ‘எனது வாக்கு எனது எதிர்காலம் - ஒரு வாக்கின் வலிமை” என்கிற தலைப்பில், தேசிய வாக்காளர் விழிப்புணர்வு போட்டியை ஆன்லைனில் நடத்தி வருகிறது. கடந்த ஜனவரி 25-ந் தேதி முதல் வினாடி-வினா, வாசகம் எழுதுதல், பாட்டுப்போட்டி, காணொலி காட்சி உருவாக்கும் போட்டி, போஸ்டர் வடிவமைப்பு போட்டிகள் நடத்தப்பட்டு வருகிறது.
இந்த போட்டிகளுக்கு விண்ணப்பிக்க கடந்த 15-ந் தேதி வரை காலஅவகாசம் அளிக்கப்பட்டது.
இந்த நிலையில், இப்போட்டியில் பங்குபெற வருகிற 31-ந் தேதி வரை கால அவகாசம் நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. இந்த வாய்ப்பினை பயன்படுத்தி அனைத்து பொதுமக்களும் இப்போட்டிகளில் பங்குபெற்று பரிசுகளை வெல்லலாம்.
பரிசுகள்
மேலும், போட்டி விதிமுறைகளை, https://voterawarenesscontest.in என்ற இணையதள முகவரியில் பார்வையிடலாம். போட்டிகளில் பங்கேற்க விரும்புவோர் போட்டி சார்ந்த பதிவுகள், முழு விவரங்களை voter-contest@eci.gov.in mailto:voter-contest@eci.gov.in என்கிற மின்னஞ்சல் முகவரிக்கு வருகிற 31-ந் தேதிக்குள் அனுப்ப வேண்டும். வெற்றியாளருக்கு ரூ.3 ஆயிரம் முதல் ரூ.2 லட்சம் வரை பரிசுகள் வழங்கப்படும். வினாடி- வினா போட்டியில் பங்கேற்று 3 நிலைகளை நிறைவு செய்வோருக்கு இ-சான்றிதழ் வழங்கப்படும்.
இந்த போட்டியில் அரசு மற்றும் தனியார் பள்ளிகள், கல்லூரி, தொழில்நுட்ப கல்லூரி, தொழிற்பயிற்சி நிலையங்களில் படிக்கும் மாணவர்கள், தனியார் நிறுவன தொழிலாளர், மத்திய மற்றும் மாநில அரசு ஊழியர்கள், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மற்றும் இதர தொழில் நிறுவனங்களில் பணிபுரிவோர் போட்டிகளில் பங்கேற்கலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.