அரசு பெண் ஊழியரிடம் தாலி கயிறு பறிப்பு
செய்யாறு அருகே அரசு பெண் ஊழியரிடம் தாலி கயிற்றை பறித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
செய்யாறு
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி தாலுகா வேலப்பாடி கிராமத்தை சேர்ந்தவர் செந்தில்குமார். அவரது மனைவி கோட்டீஸ்வரி (வயது 38). இவர், வெம்பாக்கம் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் மகளிர் திட்ட ஒருங்கிணைப்பாளராக பணியாற்றி வருகிறார்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் கோட்டீஸ்வரி மொபட்டில் காஞ்சீபுரம் சென்றுவிட்டு மாலையில் வீட்டிற்கு திரும்பினார்.
மேல்பூதேரி கூட்ரோடு அருகே வந்துகொண்டிருந்த போது, பின்னால் மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர்கள் 2 பேர் திடீரென கோட்டீஸ்வரியின் மொபட்டை மறித்து, கத்தியை காட்டி மிரட்டி அவரிடம் இருந்து செல்போன், தாலி கயிறை பறித்துக்கொண்டு அங்கிருந்து தப்பிச் சென்றனர்.
இதுகுறித்து கோட்டீஸ்வரி மோரணம் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தனபால் வழக்குப்பதிவு செய்து, மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகிறார்.