பிரதம மந்திரி நிதியுதவி திட்டம் பெற ஆதார் விவரங்களை தபால் நிலையங்களில் பதிவு செய்யலாம்-கலெக்டர் ஸ்ரேயாசிங் தகவல்
பிரதம மந்திரி கிஷான் கவுரவ நிதியுதவி திட்டத்தில் தவணை தொகை பெற ஆதார் விவரங்களை தபால் நிலையங்களில் பதிவு செய்யலாம் என விவசாயிகளுக்கு கலெக்டர் ஸ்ரேயாசிங் அறிவுறுத்தி உள்ளார்.
நாமக்கல்:
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
ஊக்கத்தொகை
பிரதம மந்திரி கிஷான் கவுரவ நிதியுதவி திட்டத்தின் கீழ் நிலமுள்ள விவசாயிகளுக்கு 4 மாதங்களுக்கு ஒரு முறை ரூ.2 ஆயிரம் வீதம் ஆண்டிற்கு ரூ.6 ஆயிரம் வேளாண் இடுபொருட்கள் வாங்குதல் மற்றும் வேளாண்மை தொடர்பான செலவினங்கள் மேற்கொள்ள ஊக்கத்தொகையாக வழங்கப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தின் கீழ் நாமக்கல் மாவட்டத்தில் 93 ஆயிரத்து 89 விவசாயிகள் பயனடைந்து வருகின்றனர்.
இதுவரை பதிவு செய்த தேதியின் அடிப்படையில் விவசாயிகளுக்கு 10 தவணை வரை தொகைகள் வந்துள்ளன. தற்போது விவசாயிகள் 11-வது தவணை (1.4.2022 முதல் 31.7.2022 வரை) தொகையை பெறுவதற்கு ஆதார் விவரங்கள் உறுதி செய்வது அவசியம் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
விவசாயிகள் ஆதார் எண் விவரங்களை, செல்போன் எண்ணுடன் இணைக்க ஏதுவாக நாமக்கல் மாவட்டத்தில் கிராம தபால் நிலையங்களில் அலுவலர்கள் மூலம் ஆதார் எண் இணைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது. இதற்காக ரூ.50 மட்டும் சேவை கட்டணமாக செலுத்த வேண்டும். இந்த பணி அஞ்சல் துறையின் மூலம் வருகிற 31-ந் தேதி வரை மேற்கொள்ளப்பட உள்ளது.
ஆதார் எண் இணைப்பு
ஆதார் எண் விவரங்களை பிரதம மந்திரி கிஷான் கவுரவ நிதி திட்டத்தின் pmkisan.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவு செய்து செல்போன் எண்ணுக்கு வரும் கடவு எண் மூலம் பதிவை உறுதிசெய்து கொள்ள வேண்டும். அல்லது அருகிலுள்ள இ-சேவை மையங்களிலோ அல்லது அஞ்சல் அலுவலகங்களிலோ பிரதம மந்திரி கிஷான் கவுரவ நிதி திட்ட வலைதளத்தில் தங்களது ஆதார் எண் விவரங்களை உள்ளீடு செய்து, விரல் ரேகையை பதிவு செய்து உறுதிசெய்து கொள்ள வேண்டும். இதற்கு சேவை கட்டணம் ரூ.15 மட்டுமே செலுத்த வேண்டும்.
பிரதம மந்திரி கிஷான் கவுரவ நிதி திட்டத்தின் கீழ் நிதி உதவி பெறும் விவசாயிகள் இந்த வாய்ப்பினை பயன்படுத்தி ஆதார் விவரங்கள் இணைப்பு அல்லது உறுதிசெய்யும் பணிகளை செய்ய வேண்டும். மேலும் இதுவரை தங்களது வங்கி கணக்குடன், ஆதார் எண் இணைப்பு மேற்கொள்ளாத பயனாளிகள் உடனடியாக வங்கி கணக்குடன் ஆதார் எண் இணைப்பு பணிகள் மேற்கொள்ள வேண்டும். விவசாயிகள் தங்கள் ஆதார் எண் விவரங்களை பதிவேற்றம் செய்து உறுதி செய்தால் மட்டுமே பிரதம மந்திரி கிஷான் கவுரவ நிதியுதவி தொடர்ந்து கிடைக்கும்.
இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.