தனியார் நிறுவன ஊழியரை தாக்கி வழிப்பறி
விழுப்புரம் அருகே தனியார் நிறுவன ஊழியரை தாக்கி வழிப்பறி செய்த 2 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.;
விழுப்புரம்,
புதுச்சேரி மாநிலம் பண்டசோழநல்லூர் பகுதியை சேர்ந்தவர் பிச்சைமுத்து (வயது 47). இவர் புதுச்சேரியில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் ஊழியராக பணியாற்றி வருகிறார். இவர் நேற்று முன்தினம் விழுப்புரம் மாவட்டம் கண்டமங்கலத்தை அடுத்த மிட்டாமண்டகப்பட்டில் நடந்த உறவினர் ஒருவரின் வீட்டு மஞ்சள் நீராட்டு விழாவில் கலந்துகொண்டார்.
பின்னர் புதுச்சேரிக்கு செல்ல பாக்கம் கூட்டுசாலை அருகில் இரவு 11 மணியளவில் பஸ்சிற்காக காத்து நின்றார்.
அப்போது அங்கு மோட்டார் சைக்கிளில் வந்த 25 வயது மதிக்கத்தக்க 2 வாலிபர்கள், திடீரென பிச்சைமுத்துவை உருட்டுக்கட்டையால் தாக்கி அவர் அணிந்திருந்த 3 பவுன் சங்கிலி மற்றும் ரூ.20 ஆயிரம் ரொக்கம், கைக்கடிகாரம், செல்போன் ஆகியவற்றை பறித்துக்கொண்டு தப்பிச்சென்று விட்டனர். இதன் மொத்த மதிப்பு ரூ.1 லட்சத்து 25 ஆயிரம் ஆகும். இதுகுறித்த புகாரின்பேரில் கண்டமங்கலம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருவதோடு தப்பிச்சென்ற 2 பேரையும் வலைவீசி தேடி வருகின்றனர்.