பள்ளிபாளையம், குமாரபாளையத்தில் 16 சாயப்பட்டறைகளின் மின் இணைப்பு துண்டிப்பு-மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் நடவடிக்கை
பள்ளிபாளையம், குமாரபாளையத்தில் 16 சாயப்பட்டறைகளின் மின் இணைப்பை துண்டித்து மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர்.
பள்ளிபாளையம்:
சாயப்பட்டறைகள்
நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம், குமாரபாளையம் பகுதிகளில் நூற்றுக்கணக்கான சாயப்பட்டறைகள் செயல்பட்டு வருகின்றன. இவற்றில் பல சாயப்பட்டறைகளில் சுத்திகரிப்பு நிலையம் இல்லை. இதனால் சாயப்பட்டறைகள் தங்களது கழிவுநீரை சுத்திகரிப்பு செய்யாமல் சாக்கடை கால்வாயில் வெளியேற்றி வருகின்றன. அவை காவிரி ஆற்றில் கலந்து தண்ணீரை மாசுபடுத்தி வருகின்றன. மேலும் நிலத்தடி நீரும் மாசுப்பட்டு வருகிறது.
இதுகுறித்த பல்வேறு புகார்கள் சென்னையில் உள்ள மாசுக்கட்டுப்பாட்டு வாரிய தலைமை அலுவலகத்துக்கு சென்றன. அதன்பேரில் நாமக்கல் மாவட்ட மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் உரிய ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டது.
மின் இணைப்பு துண்டிப்பு
இந்தநிலையில் மாவட்ட மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரி செல்வகுமார் மற்றும் அலுவலர்கள் பள்ளிபாளையத்தில் ஆவத்திபாளையம், சமயசங்கிலி, களியனூர் ஆகிய பகுதிகளில் உள்ள சாயப்பட்டறைகளில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது 12 சாயப்பட்டறைகளில் கழிவு நீரை சுத்திகரிக்காமல் வெளியேற்றி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அந்த 12 சாயப்பட்டறைகளின் மின் இணைப்பு மின்சார வாரியம் மூலம் துண்டிக்கப்பட்டது.
இதேபோல் குமாரபாளையத்தில் சுத்திகரிப்பு நிலையம் இல்லாமல் செயல்பட்ட 4 சாயப்பட்டறைகளின் மின் இணைப்பை அதிகாரிகள் துண்டித்தனர். மேலும், 16 சாயப்பட்டறைகளை நிரந்தரமாக மூட சென்னை தலைமையகத்துக்கு அறிக்கை அனுப்பப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.