நாமக்கல் மாவட்டம் முழுவதும் நிலஅளவை பணியாளர்கள் வேலைநிறுத்தம்
நாமக்கல் மாவட்டம் முழுவதும் நிலஅளவை பணியாளர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர்.
நாமக்கல்:
நில அளவர் முதல் கூடுதல் இயக்குனர் வரை உள்ள காலிப்பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும். கள பணியாளர்களின் பணிச்சுமையை குறைத்து பணியை முறைப்படுத்த வேண்டும். நிலுவை மனுக்களை காரணம் காட்டி மேற்கொள்ளும் மாவட்ட மாறுதல்களையும் ஒழுங்கு நடவடிக்கைகளையும் கைவிட வேண்டும். புற ஆதார, ஒப்பந்த முறையில் புல உதவியாளர்கள் நியமனத்தை கைவிட வேண்டும். துணை ஆய்வாளர்கள், ஆய்வாளர்களின் ஊதிய முரண்பாட்டை களைந்திட வேண்டும் என்பது உள்ளிட்ட 14 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு நில அளவை அலுவலர்கள் ஒன்றிப்பு சங்கத்தின் சார்பில் 72 மணி நேர வேலைநிறுத்த போராட்டம் அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்த போராட்டம் நேற்று தொடங்கியது.
நாமக்கல் தாசில்தார் அலுவலக வளாகத்தில் உள்ள நிலஅளவை மேலாண்மை அலுவலகத்தில் பணியாற்றும் நிலஅளவை பணியாளர்கள் 13 பேர் நேற்று சிறுவிடுப்பு எடுத்து வேலைநிறுத்த போராட்டத்தில் கலந்து கொண்டனர். இதனால் அந்த அலுவலகம் வெறிச்சோடி இருந்தது. இதனால் நிலஅளவை தொடர்பான கோரிக்கையுடன் இங்கு வந்த பொதுமக்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர். இதேபோல் மாவட்டம் முழுவதும் இந்த வேலைநிறுத்த போராட்டத்தில் 78 பேர் கலந்து கொண்டதாக சங்க நிர்வாகிகள் தெரிவித்தனர்.