பள்ளிபாளையத்தில் சரக்கு வாகனத்தில் 1½ டன் ரேஷன் அரிசி கடத்தல்-டிரைவர் கைது
பள்ளிபாளையத்தில் சரக்கு வாகனத்தில் 1½ டன் ரேஷன் அரிசி கடத்திய டிரைவரை குடிமை பொருள் குற்றப்புலனாய்வுத்துறை போலீசார் கைது செய்தனர்.
நாமக்கல்:
1½ டன் ரேஷன் அரிசி பறிமுதல்
சேலம் குடிமைபொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு துறை போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலமுருகன், சப்-இன்ஸ்பெக்டர் அகிலன், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் சத்தியபிரபு, போலீஸ் ஏட்டு கூத்தகவுண்டன் ஆகியோர் அடங்கிய குழுவினர் நேற்று காலை 6 மணி அளவில் பள்ளிபாளையம் பஸ்நிறுத்தம் அருகே திடீர் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது அந்த வழியாக வந்த சரக்கு வாகனத்தை நிறுத்தி சோதனை செய்தனர். அதில் 30 பிளாஸ்டிக் சாக்குகளில் ரேஷன் அரிசி கடத்தி வரப்பட்டது தெரியவந்தது. இதையடுத்து சுமார் 1½ டன் ரேஷன் அரிசியுடன் சரக்கு வாகனத்தை போலீசார் பறிமுதல் செய்தனர்.
டிரைவர் கைது
சரக்கு வாகனத்தை ஓட்டி வந்த ஈரோடு மாவட்டம் கருங்கல்பாளையத்தை சேர்ந்த சேட்டு என்கிற ராஜா (வயது 40) என்பவரை போலீசார் கைது செய்தனர். மேலும் ரேஷன் அரிசி எங்கிருந்து வாங்கி வரப்பட்டது? என்பது குறித்து அவரிடம் விசாரணை நடத்தினர். தொடர்ந்து சரக்கு வாகன உரிமையாளர் சதீஷ்குமாரை போலீசார் தேடி வருகிறார்கள்.