நாமக்கல்லில் மாற்றுத்திறன் குழந்தைகளுக்கான மருத்துவ முகாம்-34 பேருக்கு அடையாள அட்டை வழங்கப்பட்டது
நாமக்கல்லில் மாற்றுத்திறன் குழந்தைகளுக்கான மருத்துவ முகாம் நடந்தது. இதில் 34 பேருக்கு அடையாள அட்டைகள் வழங்கப்பட்டன.
நாமக்கல்:
மருத்துவ முகாம்
நாமக்கல் வட்டாரத்தை சேர்ந்த பிறந்தது முதல் 18 வயதிலான குழந்தைகளின் மாற்றுத்திறன் தன்மையை அளவீடு செய்ய நாமக்கல் அரசு தெற்கு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது. முகாமை மாவட்ட கலெக்டர் ஸ்ரேயாசிங் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து, மாற்றுத்திறன் குழந்தைகளை முகாமிற்கு அழைத்து வந்த பெற்றோர், பாதுகாவலர்கள், தன்னார்வலர்கள், சிறப்பு ஆசிரியர்கள், மருத்துவர்களுடன் கலந்துரையாடினார். மேலும் மாற்றுத்திறன் கொண்ட 34 குழந்தைகளுக்கு அடையாள அட்டைகளை வழங்கினார்.
குழந்தைகளுக்கு குழந்தைகள் நல மருத்துவர், கண் மருத்துவர், காது, மூக்கு, தொண்டை நிபுணர், முட நீக்கியல் மருத்துவர், மனநல மருத்துவர் உள்ளிட்ட சிறப்பு மருத்துவ நிபுணர்கள் மருத்துவ பரிசோதனைகளை மேற்கொண்டார்கள்.
மருத்துவ காப்பீடு
இதன் அடிப்படையில் மாற்றுத்திறனுடைய 18 குழந்தைகளுக்கு உதவி உபகரணங்களை வழங்கவும், 13 குழந்தைகளுக்கு கண் கண்ணாடிகள் வழங்கவும், மனவளர்ச்சி குன்றிய 6 குழந்தைகளுக்கு பயிற்சி உபகரணங்கள் வழங்கவும், 6 குழந்தைகளுக்கு காதொலி கருவிகள் வழங்கவும் மருத்துவர்களால் பரிந்துரை செய்யப்பட்டது.
மேலும் அறுவை சிகிச்சை தேவைப்படும் 6 குழந்தைகளும், நாக்கு சீரமைப்பு சிகிச்சை தேவைப்படும் 2 குழந்தைகளும், எலும்பு சீரமைப்பு சிகிச்சை தேவைப்படும் 2 குழந்தைகளும் கண்டறியப்பட்டனர். இவர்களுக்கு முதல்-அமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத்திட்டத்தின் கீழ் தேவையான சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்த முகாமில் முதன்மை கல்வி அலுவலர் மகேஸ்வரி, மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் திருமுருக தட்சணாமூர்த்தி, சிறப்பு மருத்துவர்கள், பள்ளி ஆயத்த முகாம் மற்றும் ஆரம்ப கால பயிற்சி மையங்களை சேர்ந்த சிறப்பு ஆசிரியர்கள், தன்னார்வலர்கள் கலந்து கொண்டனர்.