காதலிக்க சொல்லி பிளஸ்-1 மாணவிக்கு தொந்தரவு: 3 வாலிபர்கள் போக்சோவில் கைது

திருச்செங்கோட்டில் காதலிக்க சொல்லி பிளஸ்-1 மாணவிக்கு தொந்தரவு கொடுத்த 3 வாலிபர்கள் போக்சோவில் கைது செய்யப்பட்டனர்.;

Update: 2022-03-23 17:48 GMT
எலச்சிப்பாளையம்:
பிளஸ்-1 மாணவி
திருச்செங்கோடு சாணார்பாளையத்தை சேர்ந்தவர் கந்தசாமி. இவருடைய மகன் புவனேஷ்குமார் (வயது 21). அதேபகுதியை சேர்ந்தவர்கள் காமேஷ் (21), சவுந்தர் (21). நண்பர்களான 3 பேரும் டைல்ஸ் ஒட்டும் தொழிலாளர்களாக வேலை செய்து வருகின்றனர். 
புவனேஷ்குமார், திருச்செங்கோடு அரசு பெண்கள் பள்ளியில் பிளஸ்-1 படித்து வரும் மாணவியை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் அடிக்கடி மாணவியை அவர் காதலிக்க சொல்லி வற்புறுத்தி வந்ததாக தெரிகிறது.
காதலிக்க சொல்லி தொந்தரவு
இந்தநிலையில் சம்பவத்தன்று பிளஸ்-1 மாணவி பள்ளிக்கு செல்ல ராஜாகவுண்டம்பாளையம் பஸ் நிறுத்தத்தில் நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு புவனேஷ்குமார் தனது நண்பர்கள் காமேஷ், சவுந்தருடன் வந்தார். பின்னர் அவர் பிளஸ்-1 மாணவியை காதலிக்க சொல்லி தொந்தரவு செய்துள்ளார். இவருக்கு அதரவாக காமேசும், சவுந்தரும் செயல்பட்டனர்.
அவர்களது தொந்தரவை தாங்க முடியாத மாணவி தனது தாயிடம் அதனை தெரிவித்து அழுதுள்ளார். அவர், திருச்செங்கோடு அனைத்து மகளிர் போலீசில் வாலிபர்கள் மீது புகார் அளித்தார். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஹேமாவதி போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து புவனேஷ்குமார், காமேஷ், சவுந்தர் ஆகிய 3 பேரையும் கைது செய்தார். 
சிறையில் அடைப்பு
பின்னர் அவர்கள் 3 பேரும் திருச்செங்கோடு கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டனர். நீதிபதி சவுமியா மேத்யூ அவர்கள் 3 பேரையும் 15 நாட்கள் சிறையில் அடைக்க உத்தரவிட்டார். இதையடுத்து போலீசார் புவனேஷ்குமார், காமேஷ், சவுந்தர் ஆகிய 3 பேரையும் ராசிபுரம் கிளை சிறையில் அடைத்தனர்.

மேலும் செய்திகள்