கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 6 வயதுக்குட்பட்ட 1 லட்சத்து 21 ஆயிரம் குழந்தைகளுக்கு கூடுதல் ஊட்டச்சத்து உணவு கலெக்டர் உத்தரவு

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 6 வயதுக்குட்பட்ட 1 லட்சத்து 21 ஆயிரம் குழந்தைகளுக்கு கூடுதல் ஊட்டச்சத்து வழங்க கலெக்டர் ஸ்ரீதர் உத்தரவிட்டுள்ளார்

Update: 2022-03-23 17:33 GMT


கண்டாச்சிமங்கலம்

சிறப்பு முகாம்

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்டம் சார்பில் வருகிற 27-ந் தேதி வரை ஆரோக்கிய குழந்தை எடை வளர்ச்சி சிறப்பு முகாம் அனைத்து அங்கன்வாடி மையங்களிலும் நடைபெற்று வருகிறது. தியாகதுருகம் அருகே உள்ளபல்லகச்சேரி மற்றும் புதுப்பல்லகச்சேரி ஆகிய கிராமங்களில் உள்ள அங்கன்வாடி மையங்களில் நடைபெற்று வரும் சிறப்பு முகாம்களை கலெக்டர் ஸ்ரீதர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். 

அப்போது அங்கன்வாடி மையத்தில் ஊட்டச்சத்து குறைபாடுள்ள குழந்தைகளின் விவரங்கள் குறித்த பதிவேடுகளை பார்வையிட்ட அவர் குழந்தைகளின் வளர்ச்சிக்கு தேவையான ஊட்டச்சத்து வழங்குவது குறித்து அங்கன்வாடி பணியாளர்களுக்கு ஆலோசனை வழங்கினார். மேலும் குழந்தைகள் வளர்ச்சி மையத்தில் கழிவறை, குடிநீர் வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் உள்ளதா? என்பதையும் ஆய்வு செய்த கலெக்டர் அங்கு போதிய வசதிகளை ஏற்படுத்தித்தர சம்மந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். 

கூடுதல் ஊட்டச்சத்து உணவு

தொடர்ந்து கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 6 வயதிற்குட்பட்ட 1 லட்சத்து 21 ஆயிரத்து 25 குழந்தைகளின் ஆரோக்கியம், எடை, வளர்ச்சி மற்றும் ஊட்டச்சத்து குறைபாடுகளை கண்டறிந்து அதில் கடுமையான ஊட்டச்சத்து குறைபாடுள்ள குழந்தைகளுக்கு தனிகவனம் செலுத்தி தேவையான கூடுதல் ஊட்டச்சத்து உணவுகளை வழங்கிடவும், இதற்கு தேவையான நிதியை கலெக்டரின் தன்விருப்ப நிதியின் வாயிலாக வழங்க கலெக்டர் ஸ்ரீதர் உத்தரவிட்டார். 
அப்போது ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்ட மாவட்ட அலுவலர் அன்பழகி, குழந்தைகள் வளர்ச்சித்திட்ட அலுவலர் கல்பனா, வட்டார ஒருங்கிணைப்பாளர் முகுந்தன், அங்கன்வாடி மைய பணியாளர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் பலரும் உடனிருந்தனர்.


மேலும் செய்திகள்