செல்போன் கோபுரம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் மறியல்
நொய்யல் அருகே செல்போன் கோபுரம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
நொய்யல்,
சாலைமறியல்
கரூர் மாவட்டம், நொய்யல் அருகே நடையனூர் இளங்கோநகரில் சுமார் 200-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இங்கு செல்போன் கோபுரம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி பொதுமக்கள் கடந்த 21-ந்தேதி கரூர் கலெக்டர் அலுவலகத்தில் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் புகார் மனு கொடுத்தனர். ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லையாம்.
இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி பொதுமக்கள் நொய்யல்-வேலாயுதம்பாளையம் செல்லும் நெடுஞ்சாலையில் இளங்கோ நகர் அருகே சாலை மறியலில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவலறிந்த புகழூர் தாசில்தார் மதிவாணன் தலைமையில், வருவாய் ஆய்வாளர் ரஹமத்துல்லா, கிராம நிர்வாக அலுவலர் ஜெயந்தி மற்றும் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அதில் உடன்பாடு ஏற்படவில்லை.
பணி நிறுத்தம்
அப்போது பொதுமக்கள், உடனடியாக செல்போன் கோபுரம் அமைக்கும் பணியை நிறுத்த வேண்டும், குடியிருப்பு பகுதியில் செல்போன் கோபுரம் அமைத்தால் எந்த நேரத்திலும் குடியிருப்பு வீடுகள் மேல் செல்போன் கோபுரம் விழும் சூழ்நிலை உள்ளது. இங்குள்ள கிணற்றை மூடி அதில் செல்போன் கோபுரம் அமைக்கப் படுவதாகவும், செல்போன் கோபுரம் கிணற்றில் இருப்பதால் மழை காலங்களில் கிணற்றுக்குள் கொட்டப்பட்ட மண் கீழே இறங்கும் போது அருகில் உள்ள குடியிருப்பு வீடுகளில் செல்போன் கோபுரம் விழுந்து உயிரிழப்பு ஏற்படும் அபாயம் உள்ளது. ஆதலால் செல்போன் கோபுரம் இங்கு அமைக்கப்படு வதை தடுக்க வேண்டும் என்றனர். அதை ஏற்றுக்கொண்ட தாசில்தார் செல்போன் கோபுரம் அமைக்கும் இடத்திற்கு சென்று பார்வையிட்டு, செல்போன் கோபுரம் அமைக்கும் பணியை நிறுத்தி வைக்குமாறும், பிரச்சினை முடிவுக்கு வரும் வரை எந்த பணியும் செய்ய கூடாது என ஒப்பந்ததாரரிடமும், ஊழியர்களிடம் தெரிவித்தார். மேலும் அந்த பணியை தற்காலிகமாக நிறுத்தி வைக்குமாறும் உத்தரவிட்டார்.
போக்குவரத்து பாதிப்பு
இதையடுத்து செல்போன் கோபுரம் அமைக்கும் நிறுவனத்தை சேர்ந்தவர்களையும், இடத்தின் உரிமையாளர் மற்றும் மறியலில் ஈடுபட்ட பொதுமக்களையும் தாசில்தார் அலுவலகத்திற்கு வரவழைத்து அங்கு பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இதில் உடன்பாடு ஏற்பட்டது.
இதையடுத்து பொதுமக்கள் மறியலை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த மறியலால் அப்பகுதியில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.