கொடைக்கானல் ஏரிச்சாலையில் ஆக்கிரமிப்பு அகற்றம்
கொடைக்கானல் ஏரிச்சாலையில் ஆக்கிரமிப்பு அகற்றப்பட்டது.
கொடைக்கானல்:
மலைகளின் இளவரசியான கொடைக்கானலுக்கு வருகை தரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. இங்கு வருகை தரும் சுற்றுலா பயணிகளுக்கு அடிப்படை வசதிகளை மேம்படுத்த மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.
இதற்கிடையே கொடைக்கானல் நகரில் உள்ள அனைத்து ஆக்கிரமிப்புகளையும் அகற்ற மதுரை ஐகோர்ட்டு சமீபத்தில் உத்தரவு பிறப்பித்தது. இதன் எதிரொலியாக, கொடைக்கானலில் ஆக்கிரமிப்பு அகற்றும் பணி நேற்று தொடங்கியது.
அதன்படி கொடைக்கானல் ஏரிச்சாலையில் நகராட்சி படகு குழாம் எதிரே உள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன. கொடைக்கானல் ஆர்.டி.ஓ. முருகேசன் தலைமையில் வருவாய்துறையினர், நெடுஞ்சாலைத்துறையினர், நகராட்சி ஊழியர்கள், போலீசார் ஆகியோர் ஆக்கிரமிப்பு அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.
போக்குவரத்துக்கும், சுற்றுலா பயணிகளுக்கும் இடையூறாக கொடைக்கானல் ஏரிச்சாலையில் அமைக்கப்பட்டிருந்த 100-க்கும் மேற்பட்ட தற்காலிக கடைகள் அகற்றப்பட்டன.
2-வது நாளாக இன்று (வியாழக்கிழமை) ஆக்கிரமிப்பு அகற்றும் பணி நடைபெறுகிறது. இன்னும் 4 நாட்களுக்குள் அனைத்து ஆக்கிரமிப்புகளும் அகற்றப்பட்டு மாவட்ட நிர்வாகத்துக்கு அறிக்கை சமர்ப்பிக்கப்படும் என்று ஆர்.டி.ஓ. தெரிவித்தார்.
ஆக்கிரமிப்பு அகற்றப்பட்டதால் பாதிக்கப்பட்ட சிறு வியாபாரிகள், தங்களுக்கு மாற்று இடம் வழங்க வேண்டும் என அதிகாரிகளிடம் வலியுறுத்தினர். இதனை பரிசீலித்து முடிவு எடுப்பதாக அதிகாரிகள் உறுதியளித்தனர்.