கொரோனா தடுப்பு வழிமுறைகளை பக்தர்கள் கடைபிடிக்க வேண்டும்
பக்தர்கள் கட்டாயம் கொரோனா தடுப்பு வழிமுறைகளை கடைபிடிக்க வேண்டும் என்று புதுச்சேரி கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் கூறினார்.
திருக்கடையூர்;
திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் கோவில் குடமுழுக்கு விழாவில் பங்கேற்கும் பக்தர்கள் கட்டாயம் கொரோனா தடுப்பு வழிமுறைகளை கடைபிடிக்க வேண்டும் என்று புதுச்சேரி கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் கூறினார்.
குடமுழுக்கு
மயிலாடுதுறை மாவட்டம் திருக்கடையூரில் தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான அமிர்தகடேஸ்வரர் கோவில் குடமுழுக்கு வருகிற 27-ந் தேதி(ஞாயிற்றுக்கிழமை) நடக்கிறது. இந்தநிலையில் புதுச்சேரி கவர்னர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் கோவிலுக்கு வந்தார். அவரை மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் லலிதா, போலீஸ் சூப்பிரண்டு சுகுணாசிங் ஆகியோர் வரவேற்றார். தொடர்ந்து கோவில் நிர்வாகம் சார்பில் அவருக்கு பூரண கும்ப மரியாதை அளிக்கப்பட்டது. பின்னர் கவர்னர் தமிழிசைசவுந்தரராஜன் கோவிலுக்கு சென்று விநாயகர், அமிர்தகடேஸ்வரர், காளசம்ஹாரமூர்த்தி, அபிராமி அம்மன் ஆகிய சன்னதிகளில் வழிபட்டார். முன்னதாக விமான கலசங்களுக்கு மருந்து சாந்தும் பணியை பார்வையிட்டார்.
கொரோனா தடுப்பு நடவடிக்கை
பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது
திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் கோவில் குடமுழுக்கு தொடக்க விழாவில் கலந்து கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன். குடமுழுக்கு நாளில் புதுச்சேரிக்கும், ஐதராபாத்க்கும் இடையே விமான சேவை தொடங்க உள்ளதால் அன்று நடைபெறக்கூடிய அமிர்தகடேஸ்வரர் கோவில் குடமுழுக்கில் என்னால் கலந்து கொள்ள முடியவில்லை. தற்போது யாகசாலை தொடக்க நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் பங்கேற்று வருகின்றனர். குடமுழுக்கு விழாவில் பக்தர்கள் அனைவரும் கண்டிப்பாக கொரோனா தடுப்பு வழிமுறைகளை கடைபிடிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். அப்போது புதுச்சேரி போக்குவரத்து துறை அமைச்சர் சந்திரபிரியங்கா மற்றும் அரசு அதிகாரிகள் பா.ஜ.க. முக்கிய பிரமுகர்கள் உடனிருந்தனர். முன்னதாக புதுச்சேரி கவர்னர் தமிழிசை சவுந்தரராஜனுக்கு தருமபுரம் ஆதீனம் மாசிலாமணிதேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சாமிகள் ஆசி வழங்கி பிரசாதம் அளித்தார்.