ரெயில் முன் பாய்ந்து 2 பேர் தற்கொலை
விழுப்புரம் அருகே ரெயில் முன் பாய்ந்து 2 பேர் தற்கொலை செய்து கொண்டனர்.
விழுப்புரம்,
விழுப்புரம் ரெயில் நிலையத்தில் இருந்து நேற்று அதிகாலை வேலூருக்கு சரக்கு ரெயில் புறப்பட்டது. இந்த ரெயில் அதிகாலை 3 மணியளவில் விழுப்புரம் அருகே வெங்கடேசபுரம் ரெயில் நிலையம் அருகில் சென்று கொண்டிருந்தது. அப்போது சுமார் 35 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர், திடீரென ரெயில் முன் பாய்ந்தார். இதில் அவரது உடல் துண்டாகி சம்பவ இடத்திலேயே இறந்தார்.
இதுகுறித்த தகவல் அறிந்ததும் விழுப்புரம் ரெயில்வே போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சேகர் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் அவர் யார், எந்த ஊரை சேர்ந்தவர் என்றும், எதற்காக ரெயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார் என்பது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதேபோல் சென்னையில் இருந்து புதுச்சேரி நோக்கி பயணிகள் ரெயில் புறப்பட்டு சென்று கொண்டிருந்தது. இந்தநிலையில் காலை 10 மணியளவில் கண்டமங்கலம் அருகே பள்ளிநேலியனூர் ரெயில்வே கேட் அருகில் செல்லும்போது 65 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் திடீரென ரெயில் தண்டவாளத்தில் தலை வைத்து படுத்துக்கொண்டார். இதில் கண்ணிமைக்கும் நேரத்தில் ரெயிலின் சக்கரம் ஏறியதில் தலை துண்டாகி அவர் இறந்தார்.
இதுபற்றிய தகவல் அறிந்ததும் விழுப்புரம் ரெயில்வே போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று முதியவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் அவர் யார், எந்த ஊரை சேர்ந்தவர் என்றும், அவரின் தற்கொலைக்கான காரணம் என்ன? என்பது குறித்தும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.