நில அளவையர்கள் வேலை நிறுத்த போராட்டம்

விழுப்புரம் மாவட்டத்தில் 14 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நில அளவையர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் விவசாயிகளுக்கு பட்டா மாறுதல் செய்யும் பணி பாதிக்கப்பட்டது.

Update: 2022-03-23 17:02 GMT
விழுப்புரம், 

தமிழகத்தில் நில அளவை களப்பணியிடங்களில் மொத்தமாக 4,302 இடங்களில் 2,357 பேரை மட்டுமே கொண்டு செயல்படுவதால் அதிக பணிச்சுமை ஏற்படுவதாலும், நில அளவர் முதல் கூடுதல் இயக்குனர் வரை உள்ள காலிப்பணியிடங்கள் உடனடியாக நிரப்பப்பட வேண்டும்,
 களப்பணியாளர்கள், வரைவாளர், அமைச்சு பணியாளர் ஒருங்கிணைக்கும் முன்மொழிவுகளை திரும்ப பெற நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும், நில அளவைத்துறையை சி.எல்.ஏ. உடன் இணைக்கும் ஆலோசனையை ஆரம்ப நிலையில் கைவிட வேண்டும், ஆய்வாளர், துணை ஆய்வாளர் ஊதிய முரண்பாட்டை களைய வேண்டும் என்பன உள்ளிட்ட 14 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி நில அளவையர்கள் தமிழகம் முழுவதும் நேற்று முதல் 72 மணி நேர தொடர் வேலை நிறுத்த போராட்டத்தை தொடங்கினர்.
அந்த வகையில் விழுப்புரம் மாவட்டத்தில் 9 தாலுகா அலுவலகங்களிலும் பணியாற்றி வரும் நில அளவையர்கள் மேற்கண்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பணிக்கு செல்லாமல் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பணிகள் பாதிப்பு

இந்த வேலை நிறுத்த போராட்டம் காரணமாக 9 தாலுகா அலுவலகங்களில் உள்ள நில அளவைப்பிரிவு அலுவலகத்தில் ஊழியர்கள் இன்றி நில அளவீடு, பட்டா மாறுதலுக்காக விண்ணப்பித்த விண்ணப்பங்கள் தேக்கமடைந்து அலுவலகங்கள் வெறிச்சோடி காணப்பட்டன. மேலும் இந்த வேலை நிறுத்தத்தினால் விவசாயிகளுக்கு பட்டா மாறுதல் செய்யும் பணி, இலவச மனைப்பட்டா அளவீடு செய்தல் பணி, நில அளவீடு போன்ற பணிகளும் முற்றிலும் பாதிக்கப்பட்டன.  நில அளவையர்களின் வேலை நிறுத்தம் காரணமாக பட்டா மாறுதலுக்காக விண்ணப்பித்த விவசாயிகள் தாலுகா அலுவலகத்திற்கு வந்து ஏமாற்றத்துடன் திரும்பிச்சென்றனர்.

மேலும் செய்திகள்