போலீஸ் சூப்பிரண்டு அலுவலக ஊழியர் வீட்டில் இருந்த மண்ணுளி பாம்பு பறிமுதல்

கன்னியாகுமரி அருகே போலீஸ் சூப்பிரண்டு அலுவலக ஊழியர் வீட்டில் இருந்த மண்ணுளி பாம்பை வனத்துறையினர் பறிமுதல் செய்தனர்.

Update: 2022-03-23 16:52 GMT
கன்னியாகுமரி:
கன்னியாகுமரி அருகே போலீஸ் சூப்பிரண்டு அலுவலக ஊழியர் வீட்டில் இருந்த மண்ணுளி பாம்பை வனத்துறையினர் பறிமுதல் செய்தனர்.
சூப்பிரண்டு அலுவலக ஊழியர்
கன்னியாகுமரி அருகே உள்ள சுவாமிநாத புரத்தை சேர்ந்தவர் அரவிந்த் (வயது 35). இவர் குமரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் ஊழியராக உள்ளார். இவருடைய தந்தை குமரேசன் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டராக இருந்தவர். இறந்து விட்டார்.
இந்தநிலையில் அரவிந்த் வீட்டில் மண்ணுளி பாம்பு பதுக்கி வைத்து இருப்பதாக குமரி மாவட்ட வனத்துறைக்கு தகவல் வந்தது. அதைத்தொடர்ந்து, மாவட்ட வன அலுவலர் இளையராஜா உத்தரவின்பேரில், கோட்ட உதவி வன பாதுகாவலர் சிவகுமார் தலைமையில் வனச்சரக அலுவலர் திலீபன், வனக் காப்பாளர்கள் பிரபாகர், கிருஷ்ணமூர்த்தி, அர்ஜுனன் மற்றும் வேட்டை தடுப்பு காவலர்கள் சிவா, பிரவீன் ஆகியோர் கொண்ட சிறப்பு குழுவினர் கன்னியாகுமரிக்கு நேற்று அதிகாலையில் சென்றனர்.
மண்ணுளி பாம்பு பறிமுதல்
அவர்கள் அரவிந்த் வீட்டுக்கு சென்ற போது வீட்டுக்கதவு பூட்டி இருந்தது. இதனால் கன்னியாகுமரி கிராம நிர்வாக அதிகாரி பரத் அருண் மற்றும் கன்னியாகுமரி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராஜசேகர் முன்னிலையில் வீட்டு பூட்டை உடைத்து வனத்துறையினர் உள்ளே சென்று சோதனை நடத்தினார்கள். 
அப்போது அங்கு உள்ள ஒரு அறையில் தண்ணீர் பீப்பாயில் மண்ணுளிப்பாம்பு மூடி வைக்கப்பட்டு இருந்தது தெரிய வந்தது. வனத்துறையினர் அந்த மண்ணுளி பாம்பை எடுத்த பார்த்தனர். அது 4 ½ கிலோ எடையும் 4 அடி நீளமும் கொண்டதாகும். அந்த மண்ணுளி பாம்பை வனத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
வேட்டை
மண்ணுளி பாம்பு மருத்துவ குணம் கொண்டது. பல கோடி ரூபாய் வரை விற்பனையாகும் என்று ஏமாற்றி சில கும்பல் இதை ரகசியமாக வேட்டையாடி வருகிறார்கள். 1972 வன உயிரின பாதுகாப்பு சட்டத்தின்படி வன விலங்குகளை வைத்து இருப்பது குற்றமாகும். அதன் அடிப்படையில், தடை செய்யப்பட்ட வன உயிரினத்தை வைத்து இருந்ததாக அரவிந்த் மீது வனத்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர். 
அரவிந்த் எங்குள்ளார் என்று வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகிறார்கள். அவரை பிடித்து விசாரித்தால் தான் இந்த மண்ணுளி பாம்பு எங்கிருந்து கொண்டு வரப்பட்டது. எதற்காக கொண்டு வரப்பட்டது என்பது பற்றிய விவரங்கள் தெரிய வரும் என்று வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்த மண்ணுளி பாம்பு காட்டில் விடப்பட உள்ளது.
மண்ணுளி பாம்பில் மருத்துவ குணம் உள்ளது என்று ஏமாற்றி அதிக விலைக்கு விற்பார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்