சமையல் தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை

ஆரல்வாய்மொழி அருகே சமையல் தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். அவர் இறந்த இடத்தை வளர்ப்பு நாய்கள் காட்டி கொடுத்தன.

Update: 2022-03-23 16:49 GMT
ஆரல்வாய்மொழி:
ஆரல்வாய்மொழி அருகே சமையல் தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். அவர் இறந்த இடத்தை வளர்ப்பு நாய்கள் காட்டி கொடுத்தன.
சமையல் தொழிலாளி
ஆரல்வாய்மொழி அருகே உள்ள வடக்கூர் இந்திரா நகரை சேர்ந்தவர் ராமகிருஷ்ணன் (வயது 67), சமையல் தொழிலாளி. இவருக்கு பாஞ்சம் என்ற மனைவியும், 2 மகன்களும், 2 மகள்களும் உள்ளனர். 2 மகள்களுக்கும் திருமணமாகிவிட்டது. 
இந்தநிலையில் பாஞ்சம் சில மாதங்களாக உடல்நலக் குறைவால் வீட்டிலேயே இருந்து வந்ததாகவும், இதனால், ராமகிருஷ்ணன் மனமுடைந்த நிலையில் காணப்பட்டதாகவும் கூறப்படுகிறது.  
வீடு திரும்பவில்லை
இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு வளர்ப்பு நாய்களுடன் வீட்டை விட்டு வெளியே சென்ற  ராமகிருஷ்ணன் வீடு திரும்பவில்லை. இதனால் வீட்டில் உள்ளவர்கள், பொய்கை அணை பகுதியில் உள்ள ராமகிருஷ்ணனின் சகோதரரின் கோழிப்பண்ணைக்கு சென்றிருக்கலாம் என்று நினைத்து இருந்தனர். 
ஆனால், நேற்று காலையில் விடிந்த பிறகும் ராமகிருஷ்ணன் வீட்டுக்கு வராததால், குடும்பத்தினருக்கு சந்தேகம் வந்தது. உடனே அவர்கள் அக்கம் பக்கத்தில் ராமகிருஷ்ணனை தேடி வந்தனர்.
உடலை காட்டி கொடுத்த நாய்
இந்த நிலையில் ராமகிருஷ்ணன் வளர்த்த 2 நாய்கள் மட்டும் வீட்டுக்கு திரும்பி வந்து, வழக்கத்துக்கு மாறாக குரைத்தது. மேலும், வேகமாக ஓடியது. தன் பின்னால் யாரும் வருகிறார்களா? என்றும் நாய் திரும்பி பார்த்தது. 
இதனால், சந்தேகமடைந்த ராமகிருஷ்ணனின் இளைய மகன் சொர்ணம் நாய்களின் பின்னால் ஓடினார். வேகமாக ஓடிய நாய்கள் பொய்கை அணையின் கீழ்பக்கம் கால்வாய் ஓரத்தில் உள்ள மரத்தின்கீழ் படுத்து கொண்டன. அங்குள்ள மரத்தில் ராமகிருஷ்ணன் தூக்கில் பிணமாக தொங்கி கொண்டு இருந்தார். அதை பார்த்ததும் சொர்ணம் கதறி அழுதார்.
இதுபற்றி ஆரல்வாய்மொழி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே அவர்கள் விரைந்து வந்து, உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக நாகர்கோவில் ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுபற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்