நகைக்கடன் தள்ளுபடியில் முறைகேடு நடந்ததாக கூறி பொதுமக்கள் மறியல்

சோமாசிபாடி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் நகைக்கடன் தள்ளுபடியில் முறைகேடு நடந்துள்ளதாக கூறி பொதுமக்கள் மறியலில் ஈடுபட்டனர்.

Update: 2022-03-23 16:38 GMT
கீழ்பென்னாத்தூர்

சோமாசிபாடி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் நகைக்கடன் தள்ளுபடியில் முறைகேடு நடந்துள்ளதாக கூறி பொதுமக்கள் மறியலில் ஈடுபட்டனர். 

 பயனாளிகளின் பட்டியல் 

திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பென்னாத்தூரை அடுத்த சோமாசிபாடி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் திருவண்ணாமலை செல்லும் சாலையில் உள்ளது. 
சங்க செயலாளராக குணசேகரன், தலைவராக ரகோத்தமன் மற்றும் துணைத்தலைவர், இயக்குனர்கள் உள்ளனர். 

தமிழக அரசு கடந்த 2021-ம் ஆண்டு மார்ச் 31-ந்தேதி வரை 5 பவுன் (40 கிராம்) வரையிலான தங்க நகைக்கடன் பெற்றவர்களுக்கு தள்ளுபடி செய்தது. 
இங்கு பொது நகை கடனாக மேற்கண்ட தேதி வரை மொத்தம் 2,389 பேர் பெற்றுள்ளனர்.

இதில் தகுதியுள்ள பயனாளிகள் என 333 பேருக்கு தள்ளுபடி செய்திருப்பதாக கூட்டுறவு கடன் சங்கத்தில் அறிவிப்பு பலகையில் விவரங்கள் அடங்கிய பட்டியல் ஒட்டப்பட்டிருந்தது.

சாலை மறியல்

நிலமற்ற உறுப்பினர்களுக்கு நகைக்கடன் தள்ளுபடி பட்டியலில் பயிர்கடன் தள்ளுபடி வந்ததாக குறிப்பிடப்பட்டிருந்தது. மேலும் 5 பவுனுக்கும் குறைவாக நகைக்கடன் பெற்றவர்களுக்கு கடன் தள்ளுபடி வராததாலும் 200-க்கும் மேற்பட்டவர்கள் அந்த பகுதியில் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். 

இதபற்றி தகவல் அறிந்ததும் திருவண்ணாமலை கிராமிய  துணை போலீஸ் சூப்பிரண்டு அண்ணாதுரை, திருவண்ணாமலை கூட்டுறவு சங்கங்களின் துணைப்பதிவாளர் அலுவலக கண்காணிப்பாளர் சுரேஷ் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். 

அதைத்தொடர்ந்து மறியலில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். கீழ்பென்னாத்தூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் கோவிந்தசாமி மற்றும் போலீசார் அசம்பாவிதங்கள் நடைபெறாமல் தடுக்கும் வகையில் பாதுகாப்பு பணிகளை மேற்கொண்டனர்.

 போக்குவரத்து பாதிப்பு 

இந்த சாலை மறியலால் திருவண்ணாமலை-சென்னை செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. 

மேலும் செய்திகள்