கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நில அளவையர்கள் வேலைநிறுத்த போராட்டம் விவசாயிகளுக்கு பட்டா மாறுதல் செய்யும் பணி பாதிப்பு
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நில அளவையர்கள் வேலைநிறுத்த போராட்டம் விவசாயிகளுக்கு பட்டா மாறுதல் செய்யும் பணி பாதிப்பு;
கள்ளக்குறிச்சி
தமிழகத்தில் நில அளவை களப்பணியிடங்களில் மொத்தமாக 4,302 இடங்களில் 2,357 பேரை மட்டுமே கொண்டு செயல்படுவதால் அதிக பணிச்சுமை ஏற்படுவதாலும், நில அளவர் முதல் கூடுதல் இயக்குனர் வரை உள்ள காலிப்பணியிடங்கள் உடனடியாக நிரப்பப்பட வேண்டும், களப்பணியாளர்கள், வரைவாளர், அமைச்சு பணியாளர் ஒருங்கிணைக்கும் முன்மொழிவுகளை திரும்ப பெற நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும், நில அளவைத்துறையை சி.எல்.ஏ. உடன் இணைக்கும் ஆலோசனையை ஆரம்ப நிலையில் கைவிட வேண்டும், ஆய்வாளர், துணை ஆய்வாளர் ஊதிய முரண்பாட்டை களைய வேண்டும் என்பன உள்ளிட்ட 14 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி நில அளவையர்கள் தமிழகம் முழுவதும் நேற்று முதல் 72 மணி நேர தொடர் வேலை நிறுத்த போராட்டத்தை தொடங்கினர்.
அந்த வகையில் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள 6 தாலுகா அலுவலகத்தில் உள்ள நில அளவையாளர் அலுவலகத்தில் பணிபுரிந்து வரும் நிலஅளவர்கள் பணியை புறக்கணித்து வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையொட்டி கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் தமிழ்நாடு நிலஅளவை அலுவலகர்கள் ஒன்றிப்பு சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு மாவட்ட தலைவர் செந்தில் முருகன் தலைமை தாங்கினார். செயலாளர் பிரபாகர், பொருளாளர் சக்திவேல்முருகன் மற்றும் ராஜா, நடராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். துணை செயலாளர் இந்திரகுமார் வரவேற்றார். தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர்கள் சங்க மத்திய செயற்குழு உறுப்பினர் பாலசுப்பிரமணியன், அரசு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் ஆனந்தகிருஷ்ணன், செயலாளர் மகாலிங்கம் ஆகியோர் கண்டன உரையாற்றினர். கோட்டத் தலைவர்கள் விஜயசாந்தி, பிரகாஷ், ஆனந்த், சாலை பணியாளர்சங்க மாவட்ட செயலாளர் சாமிதுரை, ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்க மாவட்ட துணைத்தலைவர் வீரபத்திரன் மற்றும் நில அளவர்கள் கலந்து கொண்டனர்.
இந்த வேலை நிறுத்தத்தினால் விவசாயிகளுக்கு பட்டா மாறுதல் செய்யும் பணி, இலவச மனைப்பட்டா அளவீடு செய்தல் பணி, நில அளவீடு போன்ற பணிகளும் முற்றிலும் பாதிக்கப்பட்டன. நில அளவையர்களின் வேலை நிறுத்தம் காரணமாக பட்டா மாறுதலுக்காக விண்ணப்பித்த விவசாயிகள் தாலுகா அலுவலகத்திற்கு வந்து ஏமாற்றத்துடன் திரும்பிச்சென்றனர். போராட்டம் தொடர்ந்து இன்றும்(வியாழக்கிழமை), நாளையும்(வெள்ளிக்கிழமை) நடக்கிறது.