காரைக்காலில் கடையடைப்பு போராட்டம்

காரைக்காலில் விநாயகர் கோவில் முகப்பு மண்டபத்தை இடிக்க எதிர்ப்பு தெரிவித்து இந்து அமைப்பு சார்பில் நேற்று கடையடைப்பு போராட்டம் நடைபெற்றது.

Update: 2022-03-23 16:29 GMT
காரைக்கால், மார்ச்.23-
காரைக்காலில் விநாயகர் கோவில் முகப்பு மண்டபத்தை இடிக்க எதிர்ப்பு தெரிவித்து இந்து அமைப்பு சார்பில் கடையடைப்பு போராட்டம் நடைபெற்றது. இதில் திறந்திருந்த கடைகள் மீது கற்கள் வீசப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
முகப்பு மண்டபம்
காரைக்கால் மாதா கோவில் வீதியில் பொய்யாதமூர்த்தி விநாயகர் கோவில் வாசலில் ரூ.25 லட்சம் செலவில் முகப்பு மண்டபம் கட்டும் பணி நடைபெற்று வருகிறது. இந்த பணிகள் தற்போது முடியும் தருவாயில் உள்ளது. 
 இந்தநிலையில் பொதுஇடத்தை ஆக்கிரமித்து முகப்பு மண்டபம் கட்டப்படுவதாக சென்னை ஐகோர்ட்டில் காரைக்காலை சேர்ந்த சிலர் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கில், கோவில் முகப்பு மண்டபத்தை இடித்து அகற்றுமாறு கடந்த 18-ந் தேதி கோர்ட்டு உத்தரவிட்டது.
இந்து அமைப்பினர் போராட்டம்
இதுதொடர்பாக காரைக்கால் மாவட்ட இந்து அமைப்புகள் சார்பில் காரைக்காலில் நேற்று  அவசர ஆலோசனை கூட்டம் நடந்தது. கூட்டத்தின், கோவிலின் முகப்பு மண்டபத்தை இடிக்கக்கூடாது என வலியுறுத்தி காரைக்காலில் முழு அடைப்பு போராட்டத்துக்கு அழைப்பு விடுத்திருந்தனர்.
அதன்படி இன்று காரைக்கால் நகர பகுதியில் உள்ள பாரதியார் சாலை, மாதா கோவில் வீதி, திருநள்ளாறு வீதி, காமராஜர் சாலை, பி.கே சாலை உள்ளிட்ட நகரின் முக்கிய சாலைகளில் கடைகள், வர்த்தக நிறுவனங்கள் அடைக்கப்பட்டு இருந்தன.
பள்ளி, கல்லூரிகள், அரசுத் துறை அலுவலகங்கள் வழக்கம்போல் இயங்கின. வாகனங்களும் வழக்கம்போல் ஓடின. அத்தியாவசிய கடைகளான பால், மருந்து கடைகள் திறந்திருந்தன. 
போராட்டம் காரணமாக முக்கிய சாலைகள் மக்கள் நடமாட்டமின்றி வெறிச்சோடி காணப்பட்டன. போராட்டத்தில் அசம்பாவிதம் ஏற்படாமல் இருக்க போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
கடைகள் மீது கல்வீச்சு
இந்தநிலையில் காலை 10 மணிக்கு மேல், இந்து அமைப்பினர் மற்றும் பொய்யாதமூர்த்தி விநாயகர் கோவில் பாதுகாப்பு குழுவினர் 500-க்கு மேற்பட்டோர் இருசக்கர வாகனங்களில் ஊர்வலமாக சென்று, திறந்திருந்த ஒருசில கடைகளையும் மூடுமாறு வலியுறுத்தினர். 
காரைக்கால் பி.கே.சாலையில் திறந்திருந்த கடைகளை அடைக்குமாறு போராட்டக்காரர்கள் கோஷம் எழுப்பியபோது, உரிமையாளர்கள் கடைகளை மூட மறுத்துவிட்டனர். இதனால் ஆத்திரமடைந்த போராட்டக்காரர்களில் சிலர் கடைகளின் மீது கற்களை வீசினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
இதுபற்றி அறிந்த காரைக்கால் நகர போலீசார் அங்கு விரைந்து சென்று, போராட்டக்காரர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி, அங்கிருந்து அப்புறப்படுத்தினர்.
கவர்னரிடம் மனு
இதற்கிடையில் காரைக்கால் கலெக்டர் அலுவலகத்திற்கு நேற்று வருகை தந்த புதுச்சேரி கவர்னர் தமிழிசை சவுந்தரராஜனை போராட்டக்காரர்கள் சந்தித்து, பொய்யாதமூர்த்தி விநாயகர் கோவில் முகப்பு மண்டபத்தை இடிக்க கூடாது என மனு அளித்தனர்.
___

மேலும் செய்திகள்