வடமாநில தொழிலாளர்களுக்கு கஞ்சா விற்ற வாலிபர் கைது

வடமாநில தொழிலாளர்களுக்கு கஞ்சா விற்பனை செய்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.;

Update: 2022-03-23 16:28 GMT
காலாப்பட்டு, மார்ச்.23-
ஒடிசாவில் இருந்து கடத்தி வந்து வடமாநில தொழிலாளர்களுக்கு கஞ்சா விற்பனை செய்த வாலிபரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து 2¼ கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.
ரோந்து பணி
புதுச்சேரியில் கஞ்சா விற்பனையை தடுக்க காவல்துறை பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. இந்த நிலையில் சேதராப்பட்டு தொழிற்சாலை பகுதிகளில் தங்கி வேலை செய்யும் வடமாநில தொழிலாளர்கள் பலர் கஞ்சாவை அதிக அளவில் பயன்படுத்துவதாக காவல்துறைக்கு அடிக்கடி புகார்கள் வந்தது.
இந்த நிலையில் வடக்கு பகுதி போலீஸ் சூப்பிரண்டு பக்தவச்சலம் உத்தரவின்பேரில் கோரிமேடு போலீஸ் இன்ஸ்பெக்டர் நாகராஜன், சேதராப்பட்டு சப்-இன்ஸ்பெக்டர் முருகன் மற்றும் போலீசார்  ஏரிக்கரையில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
வாலிபர் சுற்றிவளைப்பு
அப்போது    அங்குள்ள அய்யனார் கோவில் அருகில் சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் வடமாநில வாலிபர் ஒருவர் நின்று கொண்டு இருந்தார். போலீசாரை கண்ட உடன் அந்த வாலிபர் அங்கிருந்து தப்பி ஓட முயற்சி செய்தார். உடனே போலீசார் அவரை சுற்றிவளைத்து பிடித்து சோதனை செய்தபோது, பேண்ட் பாக்கெட்டில் 200 கிராம் கஞ்சா பொட்டலங்களை மறைத்து வைத்திருந்தது தெரியவந்தது. 
இதையடுத்து அவரை போலீஸ் நிலையம் அழைத்துச்சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் ஒடிசா மாநிலம் ஹஜிப்பூர் பகுதியை சேர்ந்த சோம்நாத் (வயது 32) என்பதும், திருமணமாகி தனது மனைவியுடன் திருச்சிற்றம்பலம் கூட்டுரோட்டில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கியிருந்ததும் தெரியவந்தது.
2¼ கிலோ கஞ்சா பறிமுதல்
உடனே போலீசார் அவரது வீட்டுக்கு சென்று  சோதனை நடத்தினர். அப்போது ஒரு அறையில் 2 கிலோ கஞ்சா பதுக்கி வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. ஒடிசாவில் இருந்து ரெயில் மூலம் கஞ்சாவை புதுவைக்கு கடத்தி வந்து அதனை 10 கிராம் பொட்டலங்களாக பிரித்து, சேதராப்பட்டு, துத்திரப்பட்டு மற்றும் திருச்சிற்றம்பலம் கூட்டுரோடு பகுதியில் உள்ள வடமாநில தொழிலாளர்களுக்கு விற்பனை செய்தது தெரியவந்தது. 
போலீசார் அவரிடம் இருந்து 2¼ கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர். இதன் மதிப்பு சுமார் ரூ.1 லட்சம் ஆகும். மேலும் அவரது வீட்டில் இருந்து 10,500 ரொக்கப்பணம், 2 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டது. பின்னர் சோம்நாத்தை போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி காலாப்பட்டு சிறையில் அடைத்தனர்.

மேலும் செய்திகள்