‘தினத்தந்தி’ புகார் பெட்டி: மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்
‘தினத்தந்தி‘ புகார் பெட்டிக்கு 99626 78888 என்ற ‘வாட்ஸ்-அப்‘ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-
பெயர் பலகை சரி செய்யப்பட்டது
சென்னை கொளத்தூர் யுனைடேட் காலனி 1-வது குறுக்கு தெருவின் பெயர் பலகை சேதமடைந்து கீழே விழுந்து கிடப்பது குறித்து ‘தினத்தந்தி’ புகார் பெட்டியில் செய்தி வெளியானது. தற்போது அந்த பெயர் பலகை சரி செய்யப்பட்டு மீண்டும் பொருத்தப்பட்டு உள்ளது. இதனால் மகிழ்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் உடனடியாக நடவடிக்கை எடுத்த நிர்வாக ஊழியர்களுக்கும், புகாரை பதிவிட்ட ‘தினத்தந்தி’க்கும் பாராட்டை தெரிவித்து உள்ளனர்.
ஒளிராத தெரு விளக்கு
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி மீஞ்சூர் பகுதியில் உள்ள பள்ளி திருப்பாலைவனம், பள்ளி அருகே தெரு விளக்கு எரியாமல் உள்ளது. இதனால் இருள் நிறைந்த இரவு நேரத்தில் இந்த பகுதியை கடந்து செல்லவே பொதுமக்கள் அச்சப்படுகிறார்கள். எனவே, தெரு விளக்கை சரிசெய்து, மீண்டும் இந்த பகுதிக்கு வெளிச்சம் கிடைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- ரமேஷ், பொன்னேரி.
பள்ளம் மூடப்படுமா?
சென்னை திருவொற்றியூர் கலைஞர் நகர் மெயின் ரோட்டில் சில மாதங்களுக்கு முன் மழைநீர் வடிகால்வாய் பணிக்காக பள்ளம் தோண்டப்பட்டது. ஆனால், இந்த பள்ளத்தை மூடாமலேயே விட்டுவிட்டதால், அதில் கழிவுநீர் தேங்கி துர்நாற்றம் வீசுகிறது. மேலும், இரவு நேரத்தில் இந்த பகுதியை கடந்து செல்பவர்கள், கவனக்குறைவால் பள்ளத்தில் விழுந்துவிடும் அவலங்களும் ஏற்படுகிறது. எனவே, இந்த பள்ளத்தை உடனடியாக மூட உத்தரவிட வேண்டும்.
- சீனிவாசன், திருவொற்றியூர்.
சாய்ந்த மின்கம்பம் தலை நிமிருமா?
சென்னை பள்ளிக்கரணை வள்ளல் பாரி நகர் 7-வது தெருவில் உள்ள மின் கம்பம் சாய்ந்து ஆபத்தான நிலையில் உள்ளது. மேலும் இந்த மின்கம்பத்தின் அடிப்பகுதி சேதமடைந்து காட்சி அளிக்கிறது. இதனால், எந்த நேரத்திலும் இந்த மின் கம்பம் சரிந்து கீழே விழ வாய்ப்புகள் இருப்பதால், விபத்து ஏற்படும் முன்பு உடனடியாக இதை சரிசெய்ய மின்வாரியம் நடவடிக்கை எடுக்குமா?.
- ஷாஜி, பள்ளிக்கரணை.
சேதம் அடைந்த அங்கன்வாடி கட்டிடம்
காஞ்சீபுரம் மாவட்டம் புள்ளலூர் மதுரா அரங்கநாதபுரம் கிராமத்தில் உள்ள அங்கன்வாடி கட்டிடம் பழுதடைந்து, கட்டிடத்தில் ஆங்காங்கே சேதம் அடைந்து காட்சி அளிக்கிறது. இதனால் அந்த பகுதியில் உள்ள குழந்தைகள் வெட்ட வெளியிலும், மரத்தடியிலும் கல்வி பயின்று வரும் அவலநிலை ஏற்பட்டு உள்ளது. எனவே, இந்த கட்டிடத்தை சரிசெய்து புதுப்பித்து தர சம்பந்தப்பட்ட நிர்வாகத்தை கேட்டுக்கொள்கிறோம்.
- அரங்கநாதபுரம் கிராம மக்கள்.
குழந்தைகள் விளையாட்டு பூங்காவின் அவலநிலை
சென்னை கொடுங்கையூர் முத்தமிழ் நகர் 126-வது தெருவில் அமைந்துள்ள குழந்தைகள் விளையாட்டு பூங்கா பராமரிப்பில்லாமல் உள்ளது. மேலும், குப்பைகள் சேர்ந்து அலங்கோலமாக காட்சி அளிக்கிறது. எனவே, குப்பைகளை அகற்றி பூங்காவை சீரமைத்து முறையாக பராமரிக்க மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
- மணிகண்டன், கொடுங்கையூர்.
கால்வாயின் மூடி எங்கே?
சென்னை திருவொற்றியூர் கலைஞர் நகர் 4-வது தெருவில் உள்ள ஒரு வீட்டின் வாசல் அருகே உள்ள மழைநீர் வடிகால்வாய் மூடி இல்லாமல் ஆபத்தான முறையில் காட்சி அளிக்கிறது. இதனால் குப்பைகள் சேர்ந்து கொசுக்கள் உற்பத்தியாவதுடன், யாராவது தெரியாமல் இதில் விழுந்து விடவும் வாய்ப்புகள் இருப்பதால், இந்த கால்வாயை உடனடியாக மூடுவதற்கு நடவடிக்கை எடுக்க மாநகராட்சி அதிகாரிகள் உத்தரவிட வேண்டும்.
- ஆண்டியப்பன், திருவொற்றியூர்.
குடிநீர் குழாய்கள் சேதம்
செங்கல்பட்டு மாவட்டம், சோழிங்கநல்லூர் மேடவாக்கம் பிரதான சாலையில் மழைநீர் வடிகால்வாய் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த பணியின்போது பெரியார் நகரில் உள்ள ராமதாஸ் தெரு, ராமதாஸ் குறுக்கு தெரு, சோழன் தெரு மற்றும் பாண்டியன் தெரு ஆகிய தெருக்களுக்கு செல்லக்கூடிய குடிநீர் குழாய்கள் சேதம் அடைந்து 8 மாதத்திற்கு மேல் ஆகிறது. இதனால் அப்பகுதியில் உள்ள மக்கள் போதிய அளவு குடிநீர் இல்லாமல் சிரமப்படுகிறார்கள். எனவே, மாநகராட்சி ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்குமா?
- மணி லர்ஷிகா, பெரியார்நகர்.
குண்டும், குழியுமான சாலை
எண்ணூர் நெடுஞ்சாலையில் உள்ள கொருக்குப்பேட்டை சரக்கு ரெயில் செல்லும் ரெயில்வே கிராசிங் பகுதியில் உள்ள சாலை, மோசமான நிலையில் குண்டும், குழியுமாக காட்சி அளிக்கிறது. இதனால், இந்த பகுதியில் அடிக்கடி விபத்துகளும் ஏற்படுகின்றன. எனவே, வாகன ஓட்டிகளை அச்சுறுத்தும் இந்த சாலையை சீரமைக்க உடனடி நடவடிக்கை தேவை.
- இதயக்கனி, எண்ணூர்.
மந்தமாக நடக்கும் மேம்பால பணி
சென்னை எம்.ஜி.ஆர். சென்டிரல் ரெயில் நிலையத்தில் புறநகர் ரெயில்கள் மற்றும் எக்ஸ்பிரஸ் செல்லும் பாதையில் சென்டிரலில் இருந்து பொன்னேரி, சூலூர் பேட்டை, கும்மிடிப்பூண்டி போன்ற பகுதிகளுக்கு செல்லும் பாதையில் மீஞ்சூரில் இருந்து காட்டூர் செல்லும் சாலையை இணைக்கும் இடத்தில் மேம்பாலம் கட்டும் பணி நடந்து வருகிறது. இந்த மேம்பால பணி மந்தமாக நடைபெற்று வருகிறது. இதனால் பயணிகள் மற்ற ஊர்களுக்கு செல்ல காலவிரயம் ஏற்படுகிறது. எனவே, பொதுமக்கள் பயன்பெற இந்த பணியை விரைவாக முடிக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
- சேகர், மீஞ்சூர்.