பெட்ரோல்-டீசல் விலையை உயர்த்துவதை நிறுத்த வேண்டும்; சித்தராமையா வலியுறுத்தல்
பெட்ரோல்-டீசல் விலையை உயர்த்துவதை நிறுத்த வேண்டும் என சித்தராமையா வலியுறுத்தி உள்ளார்
பெங்களூரு:
கர்நாடக சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-
5 மாநில சட்டசபை தேர்தலுக்காக பெட்ரோல்-டீசல் விலை உயர்வை மத்திய அரசு நிறுத்தி வைத்தது. இப்போது அந்த தேர்தல் முடிவடைந்துவிட்டதால் பெட்ரோல்-டீசல் விலை மீண்டும் உயர தொடங்கியுள்ளது. இந்த விலை உயர்வை கண்டித்து போராட்டம் நடத்த காங்கிரஸ் முடிவு செய்துள்ளது. வரும் நாட்களில் போராட்டம் நடத்துவோம். சமையல் கியாஸ் விலையும் 50 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது.
இந்த விலை உயர்வால் மக்கள் தத்தளிக்கிறார்கள். சமையல் எண்ணெய் உள்பட உணவு தானியங்கள் மற்றும் இரும்பு, சிமெண்டு போன்றவற்றின் விலையும் அதிகரித்துவிட்டது. விலைவாசி உயர்வை கட்டுப்படுத்துவதில் பிரதமர் மோடி தோல்வி அடைந்துவிட்டார்.
டீசல் விலை உயரும்போது, உணவு தானியங்கள் உள்பட அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்கிறது. இதனால் சாமானிய மக்கள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள். அதனால் மத்திய அரசு பெட்ரோல்-டீசல் விலையை உயர்த்துவதை நிறுத்த வேண்டும்.
இவ்வாறு சித்தராமையா கூறினார்.