காஞ்சீபுரம் கோர்ட்டில் ஆஜர் படுத்தப்பட்ட 2 மாவோயிஸ்டுகளுக்கு 4-ந்தேதி வரை காவல்

காஞ்சீபுரம் கோர்ட்டில் ஆஜர் படுத்தப்பட்ட 2 மாவோயிஸ்டுகளுக்கு 4-ந்தேதி வரை காவலை நீட்டித்து நீதிபதி உத்தரவிட்டார்.

Update: 2022-03-23 14:08 GMT
காஞ்சீபுரம்,  

மாவோயிஸ்டு இயக்கத்தை சேர்ந்த ரீனா ஜாய்ஸ்மேரி (வயது 42) மற்றும் மகாலிங்கம் (50) ஆகியோர் காஞ்சீபுரம் மாவட்டம் படப்பையில் தங்கியிருந்த போது கடந்த 21.7.2016 அன்று கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இவர்கள் இருவரும் மாவோயிஸ்டு இயக்கத்தின் முக்கிய உறுப்பினர்களாக இருந்ததுடன் உறுப்பினர்களை சேர்க்கவும், அவர்களுக்கு பயிற்சியளிக்கவும் செய்துள்ளனர்.

இவர்களில் ரீனா ஜாய்ஸ்மேரி மீது 3 வழக்குகளும், மகாலிங்கத்தின் மீது 10 வழக்குகளும் நிலுவையில் இருந்தது. சிறையில் அடைக்கப்பட்டிருந்த இவர்கள் இருவரையும் கியூ பிரிவு போலீசார் காஞ்சீபுரம் மாவட்ட அமர்வு கோர்ட்டில் ஆஜர்படுத்தினார்கள்.

இவர்கள் இருவரையும் விசாரித்த மாவட்ட அமர்வு கோர்ட்டு நீதிபதி சந்திரன் அவர்கள் இருவருக்கும் 4-ந்தேதி வரை காவலை நீட்டித்தார். வருகிற 4-ந்தேதி மீண்டும் கோர்ட்டில் ஆஜர் படுத்தும்படி போலீசாருக்கு உத்தரவிட்டார்.

இதனையடுத்து ரீனா ஜாய்ஸ்மேரி வேலூரில் உள்ள பெண்கள் மத்திய சிறையிலும், மகாலிங்கம் மதுரை மத்திய சிறையிலும் அடைப்பதற்காக போலீசார் அழைத்து சென்றனர்.

மேலும் செய்திகள்