மாங்காடு அருகே ரூ.50 கோடி அரசு ஆக்கிரமிப்பு நிலம் மீட்பு
மாங்காடு அருகே கோர்ட்டு உத்தரவின்படி ரூ.50 கோடி அரசு நிலம் மீட்கப்பட்டது.
பூந்தமல்லி,
செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து உபரி நீர் செல்லும் தந்தி கால்வாயின் பிரிவு கால்வாய் மாங்காடு பாத்திமா நகர் வழியாக செல்கிறது. இந்த பகுதியில் 31 வீடுகள் ஆக்கிரமிப்பில் கட்டப்பட்டு உள்ளது குறித்து கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இதனையடுத்து ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என கோர்ட்டு உத்தரவிட்டது. இதனால் பொதுப்பணித்துறை மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் அந்த பகுதிகளை அளவீடு செய்து ஆக்கிரமிப்பில் உள்ள 31 வீடுகளுக்கு முறையாக நோட்டீஸ் வழங்கினர்.
இந்தநிலையில் நேற்று ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியில் குன்றத்தூர் தாசில்தார் பிரியா, பொதுப்பணித்துறை அதிகாரி பாபு ஆகியோர் தலைமையில் ஊழியர்கள் வந்தனர். ஆக்கிரமிப்பு கட்டிடங்களை பொக்லைன் எந்திரம் கொண்டு இடித்து கொண்டிருந்தனர்.
அப்போது அங்கு வந்த ஒரு தரப்பினர் பட்டா இடத்தில் கட்டிடம் இருப்பதாக கட்டிடங்களை இடிப்பதை நிறுத்த வேண்டும் என தெரிவித்தனர். அப்போது அவர்கள் தாசில்தாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது ஆவேசமடைந்த பெண் தாசில்தார் எந்த காரணம் முன்னிட்டும் ஆக்கிரமிப்பு அகற்றும் பணி நிறுத்தக்கூடாது இது கலெக்டர் உத்தரவு என்று கூறினார்.
தற்போது அங்கு போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர், ஆக்கிரமிப்புகளும் அகற்றப்பட்டு வருகிறது. தற்போது மீட்கப்பட்டுள்ள அரசு நிலத்தின் மதிப்பு ரூ.50 கோடி என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.