வளர்ச்சிப்பணிகளை கலெக்டர் ஆய்வு

திருவாடானை யூனியனில் வளர்ச்சிப்பணிகளை கலெக்டர் ஆய்வு செய்தார்.

Update: 2022-03-23 13:58 GMT
தொண்டி, 
திருவாடானை யூனியனில் வளர்ச்சிப்பணிகளை கலெக்டர் ஆய்வு செய்தார்.
ஆய்வு
திருவாடானை யூனியனில் வளர்ச்சி பணிகளை மாவட்ட கலெக்டர் சங்கர்லால் குமாவத் நேரில் ஆய்வு செய்தார். அப்போது அவர் தினையத்தூர் கிராமத்தில் ரேஷன்கடையை ஆய்வு செய்தார். அங்கு பொதுமக்களிடம் அரிசி, சீனி போன்ற பொருட்கள் முறையாக வழங்கப்படுகிறதா என்பதை கேட்டறிந்தார். பின்னர் திருவாடானை ஊராட்சி அலுவலகம் அருகில் முன்மாதிரியாக புதிதாக கட்டப்பட்டுள்ள அங்கன் வாடி மையத்தை பார்வையிட்ட அவர் அங்குள்ள காய்கறி தோட்டம், குழந்தைகள் விளையாட அமைக்கப்பட்டுள்ள ஊஞ்சல், சறுக்கு போன்ற விளையாட்டு சாதனங்களையும் ஆய்வு செய்தார்.
அப்போது அங்கன்வாடி மைய வளாகத்தில் மரக் கன்றுகளை நட்டார்.தொடர்ந்து பாரதபிரதமர் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் தூய்மை பணியாளருக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள வீட்டின் கட்டுமான பணியை நேரில் ஆய்வு செய்தார். 
அகழி
சேந்தனி சாலையில் மகாத்மா காந்தி தேசிய ஊரகவேலை உறுதியளிப்பு திட்டத்தின் கீழ் அகழி வெட்டும் பணியை ஆய்வு செய்தார். தொடர்ந்து ஓரிக்கோட்டை ஊராட்சியில் தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தின் கீழ் கழிவு நீர் கால்வாய் அமைக்கும் பணியை நேரில் பார்வையிட்ட மாவட்ட கலெக்டர் திட்ட மதிப்பீட்டின்படி பணி நடைபெறு கிறதா என்பதை ஆய்வு செய்தார்.
பின்னர் அங்கு ஒரு வீட்டில் அமைக்கப்பட்டுள்ள தனி நபர் உறிஞ்சுகுழி பயன்பாட்டை ஆய்வு செய்தார். இந்த ஆய்வின் போது வட்டார வளர்ச்சி அலுவலர் சேவுகப்பெருமாள், ஊராட்சி தலைவர்கள் இலக்கியா ராமு, சரளா தேவி ரெத்தின மூர்த்தி, காந்திமதி ஆகியோர் உடன் இருந்தனர்.
நலத்திட்ட உதவி
முன்னதாக நம்புதாளையில் நடைபெற்ற பட்டா கணினி திருத்த முகாமில் கலந்து கொண்ட மாவட்ட கலெக்டர் சங்கர்லால் குமாவத் 144 பயனாளிகளுக்கு முதியோர் உதவித்தொகை, இலவச வீட்டுமனைப்பட்டா, கணினி திருத்தம் தொடர்பான நலத்திட்ட உதவிகளை வழங்கினார். மாவட்ட வருவாய் அலுவலர் காமாட்சி கணேசன், ராமநாதபுரம் வருவாய் கோட்டாட்சியர் சேக் மன்சூர் தாசில்தார் செந்தில்வேல் முருகன், சமூகப் பாதுகாப்பு திட்ட தாசில்தார் சாந்தி, யூனியன் தலைவர் முகம்மது முக்தார், ஒன்றிய கவுன்சிலர் சுமதி முத்துராக்கு, நம்புதாளை ஊராட்சித் தலைவர் பாண்டிச்செல்வி ஆறுமுகம், கிராம நிர்வாக அலுவலர் நம்புராஜேஷ், ஆகியோர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்