‘தி காஷ்மீர் பைல்ஸ்’ படத்தை பார்த்த பா.ஜனதா எம்.எல்.ஏ.க்கள்- சட்டசபையில் காரசார விவாதம்
‘தி காஷ்மீர் பைல்ஸ்’ திரைப்படத்தை பா.ஜனதா எம்.எல்.ஏ.க்கள் பார்த்தது தொடர்பாக சட்டசபையில் நேற்று காரசார விவாதம் நடைபெற்றது.
மும்பை,
‘தி காஷ்மீர் பைல்ஸ்’ திரைப்படத்தை பா.ஜனதா எம்.எல்.ஏ.க்கள் பார்த்தது தொடர்பாக சட்டசபையில் நேற்று காரசார விவாதம் நடைபெற்றது.
சிறப்பு காட்சி
காஷ்மீர் பண்டித்துகளின் பிரச்சினையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட ‘தி காஷ்மீர் பைல்ஸ்’ இந்தி திரைப்படத்தை பிரதமர் மோடி உள்ளிட்ட பா.ஜனதா தலைவர்கள் வெகுவாக பாராட்டி உள்ளனர். திரைப்படத்திற்கு பா.ஜனதா அரசு ஆளும் மாநிலங்கள் வரிவிலக்கு அளித்து உள்ளன.
இந்தநிலையில் மும்பையில் நேற்று மாலை பா.ஜனதா தலைவர் கிருபா சங்கர் சிங் இந்த படத்தை பா.ஜனதாவினர் காண சிறப்பு காட்சியை ஏற்பாடு செய்திருந்தார். இதையடுத்து பா.ஜனதாவினர் இந்த படத்தை சென்று பார்த்தனர்.
இந்தநிலையில் நேற்று சட்டசபையில் பேசிய மாநில மந்திரி ஜெயந்த் பாட்டீல், சட்டசபை கூட்டத்தில் கலந்து கொள்ளாமல் ‘தி காஷ்மீர் பைல்ஸ்’ படத்தை காண சென்ற பா.ஜனதா எம்.எல்.ஏ.க்களை கடுமையாக தாக்கினார். மாநில வளர்ச்சி தொடர்பான பிரச்சினைகளை விட திரைப்படத்தை பார்ப்பது அவர்களுக்கு முக்கியமானது என சாடினார்.
படத்தை பார்த்ததில் பிரச்சினையா?
இந்தநிலையில் நேற்று சட்டசபை கூட்டத்தில் கலந்துகொண்ட எதிர்க்கட்சி தலைவர் தேவேந்திர பட்னாவிஸ், மந்திரி ஜெயந்த் பாட்டீல் பேசியதை சுட்டிக்காட்டி பேசினார்.
அப்போது அவர் கூறுகையில், “மந்திரி நேற்று நாங்கள் ‘தி காஷ்மீர் பைல்ஸ்’ படத்தை சென்று பார்த்தது குறித்து பேசியுள்ளார். நாங்கள் முன்கூட்டியே முடிவு செய்தோம் அதன்படி நேற்று அந்த படத்தை பார்த்தோம். இதில் உங்களுக்கு ஏதாவது பிரச்சினையா? நாங்கள் படத்தை பார்த்ததில் உங்களுக்கு ஏதேனும் பிரச்சினை என்றால் அதை சட்டசபைக்கு வெளியே பேசுங்கள்” என்றார்
நன்கொடை வழங்குங்கள்
இதற்கு பதில் அளித்த மந்திரி ஜெயந்த் பாட்டீல், ‘தி காஷ்மீர் பைல்ஸ்’ திரைப்படம் இடைவேளைக்கு பிறகு சலிப்பூட்டுகிறது, சுவாரஸ்யமாகவும் இல்லை. பாருங்கள், உங்களுக்கும் தெரியும்.
வெறும் 17 கோடியில் எடுக்கப்பட்ட இந்த திரைப்படம் ரூ.150 கோடி ஈட்டியுள்ளதாக நீங்கள் பாராட்டினால், காஷ்மீர் பண்டித்துகளுக்கு வீடு கட்டுவதற்காக கிடைக்கும் வருமானத்தை நன்கொடையாக வழங்குமாறு தயாரிப்பாளரிடம் கேளுங்கள்” என்றார்.
முன்னதாக, சட்டசபையில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தங்கள் பிரச்சினைகளை எழுப்ப போதுமான நேரம் வழங்கப்படுவதில்லை என தேவேந்திர பட்னாவிஸ் குற்றம் சாட்டினார்.
ஆனால் மந்திரி ஜெயந்த் பாட்டீல் அந்த குற்றச்சாட்டுக்கு மறுப்பு தெரிவித்தார்.
----------------